நெல்லை கண்ணனை கைது செய்ய கோரி மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ தலைவர்கள் கைது: தொண்டர்கள் சாலையில் அமர்ந்து போராடியதால் பரபரப்பு

சென்னை: மோடி, அமித்ஷாவை அவதூறாக பேசிய நெல்லை கண்ணனை கைது செய்ய கோரி மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜ  தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளயைத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பேசிய காங்கிரஸ் பேச்சாளர் நெல்லை கண்ணன் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. அவரின் இந்த பேச்சுக்கு பாஜவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு போலீஸ் நிலையங்களில் நெல்லை கண்ணனை கைது செய்ய கோரி பாஜ சார்பில் புகார் அளிக்கப்பட்டது. கவர்னரிடமும் மனு அளித்தனர். பாஜ தலைவர்களை அவதூறாக பேசிய நெல்லை கண்ணனை 31ம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, பாஜக முன்னாள் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று பாஜ தேசிய செயலாளர் எச்.ராஜா எச்சரித்து இருந்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று மதியம் சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். ஏற்கனவே மெரினா கடற்கரையில் போராட்டம், உண்ணாவிரதம் இருக்க தடை அமலில் உள்ளது. இந்த நிலையில் கட்சி அலுவலகத்தில் இருந்து தடையை மீறி காரில் பொன்ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மெரினா கடற்கரைக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு அவர்கள் காந்தி சிலை அருகில் அகிம்சை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து போலீஸ் வேனில் அழைத்து சென்றனர்.

அதே நேரத்தில் பாஜக பொது செயலாளர் வானதி சீனிவாசன் தலைமையில் ஏராளமானோர் ராதாகிருஷ்ணன் சாலை சிட்டி சென்டர் அருகில் இருந்து காந்தி சிலை வரை பேரணியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், பேரணியாக சென்றவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இதனால், மயிலாப்பூரில் இருந்து கடற்கரை நோக்கி செல்லும் வாகனங்களின் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அருகில் உள்ள மாநகராட்சி மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் இரவில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Stories: