டெண்டரில் குளறுபடி, பில் செட்டில் செய்வதில் தாமதம்: சுற்றுலாத்துறைக்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதி 300 கோடி கிடைக்குமா?: குறிப்பிட்ட காலத்துக்குள் முடிப்பதில் சிக்கலே பிரச்னைக்கு காரணம்

சென்னை: டெண்டரில் குளறுபடி, பில் செட்டில் செய்வதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் சுற்றுலாத்துறை சார்பில் ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் நடந்து வரும் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் முக்கிய சுற்றுலா தலங்களில் பல்வேறு அடிப்படை வசதிகளை சுற்றுலாத்துறை மூலம் செய்து தரப்படுகிறது. குறிப்பாக, ஓய்வுக்கூடங்கள், கழிவறைகள், அணுகு சாலைகள், உடை மாற்றுமு் அறைகள், வாகன நிறுத்தும் இடங்கள், குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி, வழிகாட்டி பலகைகள் நிறுவுதல் போன்றவை சுற்றுலாத் தலங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இப்பணிகள் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவி மூலம் ₹300 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிதியை கொண்டு காஞ்சிபுரம், பெரும்புதூர், ஒகேனக்கல், திருச்சி, சிதம்பரம், ஆலங்குடி உள்ளிட்ட பல இடங்களில் சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்படுத்துவதற்கான பெரும்பாலான பணிகளுக்கு கடந்த மார்ச் மாதம் டெண்டர் விடப்பட்டது. ஆனால், ஒப்பந்த நிறுவனங்கள் சார்பில் முன்கூட்டியே கமிஷன் கொடுத்தால் தான் பணிகளை தொடங்க வேண்டும் என அதிகாரிகள் கூறியதால் மிகவும் தாமதமாக தான் பணிகளை தொடங்கினர். இதனால், தற்போது வரை 30 சதவீதம் மட்டுமே இப்பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும்,டெண்டர் எடுத்த ஒப்பந்த நிறுவனங்களுக்கு 55 முதல் 60 நாட்கள் வரை பில் தொகை செட்டில் செய்யாமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருகின்றனர். இதனால், இப்பணிகளை செய்யும் ஒப்பந்த நிறுவனங்களும் அப்படியே பணிகளை கிடப்பில் போட்டுள்ளது.

மேலும், அறநிலையத்துறைக்கு ₹8 கோடி செலவில் மேம்பாட்டு பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. இதில், ஒரே நிறுவனத்துக்கு 6 இடங்களில் பணிகளை செய்ய சட்ட விரோதமாக சுற்றுலாத்துறை ஒப்புதல் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் ஒப்பந்த நிறுவனம் ஒன்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இருப்பினும் டெண்டர் எடுத்த நிறுவனத்தை பணிகளை செய்யுமாறு சுற்றுலாத்துறை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும் உயர்நீதிமன்ற உத்தரவு எப்படி இருக்குமோ என்கிற பயத்தில் அந்த நிறுவனமும் பணிகளை செய்யலாமா, வேண்டாமா என்ற பயத்தில் உள்ளது. இந்நிலையில் வரும் 2020 ஜூன் மாதத்துக்குள் ஆசிய வளர்ச்சி வங்கி பணிகளை முடிக்க வேண்டும். ஆனால், டெண்டரில் குளறுபடி, பில் தொகை செட்டில் செய்வதில் இழுபறி போன்ற காரணங்களால் பணிகளை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆசிய வளர்ச்சி வங்கி நிதி கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: