ரூ.130 கோடி இந்தியர்களும் இந்துக்களே’ என தெரிவித்த மோகன் பகவத் மீது காங்கிரஸ் புகார்

ஐதராபாத்: `இந்தியாவில் வசிக்கும் 130 கோடி மக்களும் இந்துக்களே’ என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மீது காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.   ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கடந்த 25ம் தேதி ஐதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது,    `இந்த நாட்டில் பிறந்த யாராக இருந்தாலும், மொழி மற்றும் கலாசாரம் கடந்து அவர்கள் அனைவரும் பாரதத்தாயின் புதல்வர்கள். எனவே இந்தியாவில் வசிக்கும் 130 கோடி பேரும் இந்துக்களே’ என்றார். அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தெலங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான வி.ஹனுமந்த ராவ் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மீது ஐதராபாத்தில் உள்ள எல்பி நகர் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். இதில் கூறப்பட்டுள்ளதாவது: 130 கோடி மக்களும் இந்துக்களே என தெரிவித்த மோகன் பகவத்தின் கருத்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள் உள்ளிட்டோரின் உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகளை புண்படுத்துவது மட்டுமின்றி இந்திய அரசியலமைப்பையும் சிதைத்துள்ளது. இது இனக்கலவரம், சட்டம் ஒழுங்கு பிரச்னையையும் உருவாக்கும். எனவே மோகன் பகவத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: