அசாமை போன்று தமிழகத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடைக்க தடுப்பு முகாம்: திருச்சியில் அமைக்க பரிசீலனை?

திருச்சி: அசாமை போன்று தமிழகத்தில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடைக்க தடுப்பு முகாம் அமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முறையான ஆவணங்கள் இன்றி தமிழகத்திற்குள் ஊடுருவிய வெளிநாட்டினர் தற்போது திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனையே தடுப்பு முகாமாக மாற்றுவது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் தொடங்கி இன்று நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் மத்திய பாஜ அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை நடைமுறைபடுத்த தடுப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. தலைநகர் கவுகாத்தியில் இருந்து 129 கி.மீ தூரத்தில் உள்ள கோல்பாராவில் உள்ள மத்தியாவில் ரூ.46 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தடுப்பு மையத்தில் 3,000 கைதிகளை தங்க வைக்க முடியும். இந்த மாதத்தில் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் இருந்த நிலையில், மழைக்காலத்தால் தற்காலிகமாக பணிகள் முடிவு பெறாமல் உள்ளது. கட்டுமானத்தை விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டு, மூலப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தின்படி, முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் உள்ள சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் மற்றும் சமணர்களுக்கு இந்திய குடியுரிமையை விரைவாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் அடையாளம் காணப்பட்டால் தடுப்பு மையத்தில் அடைக்கப்படுவார்கள் என்பதே இச்சட்டத்திற்கு எதிரான போராட்டம் தீவிரமடைய காரணம்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தமிழக அரசு ஆதரவு அளித்துள்ளதால் அசாமை போல தமிழகத்திலும் தடுப்பு மையம் அமைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனை எங்கு அமைப்பது என்பது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். தற்போது தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக ஊடுருவிய வெளிநாட்டினரை தங்க வைக்கும் சிறப்பு முகாம் திருச்சியில் செயல்படுகிறது. அந்த மையத்தை தடுப்பு மையமாக மாற்ற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Related Stories: