ககன்யான் திட்டத்துக்காக 30.5 டன் இரும்பு வினியோகம்: ரூர்கேலா ஆலை நிர்வாகம் தகவல்

புவனேஸ்வர்: மனிதர்களை விண்வெளிக்கு  அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு 30.5 டன் இரும்பு வினியோகித்து இருப்பதாக ரூர்கேலா இரும்பாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ககன்யான் என்பது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) திட்டமாகும். இதற்கான தொடக்கநிலை ஆய்வுகள், தொழில்நுட்ப வசதி தொடர்பான முன்னேற்பாடுகள் கடந்த 2006ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 3.7 டன் எடையுள்ள இந்த விண்கலம் மூன்று பேர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இது ஜிஎஸ்எல்வி. மார்க் III மூலம் வரும் 2021ம் ஆண்டில் விண்ணில் ஏவப்படவுள்ளது.

இந்நிலையில், இத்திட்டத்துக்கு தேவையான விண்கலத்தை தயாரிக்க இஸ்ரோவுக்கு 30.5 டன் பிரத்யேக இரும்பு வினியோகித்திருப்பதாக ரூர்கேலா இரும்பாலை தெரிவித்துள்ளது. மேலும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ககன்யான் விண்கலம் தயாரிக்க தேவையான இரும்பு தகடுகளில், முதல் பகுதியாக 14 தகடுகள் அனுப்பப்பட்டுள்ளது. பொதுவாக, அதிக வலிமை உடைய இரும்பு குறைந்த வார்ப்புத்தன்மை உடையதாகவும் குறைந்த வலிமை கொண்ட இரும்பு அதிக வார்ப்புத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கும். ஆனால், ககன்யான் விண்கலத்துக்கான இரும்பு 5 அல்லது 6 மடங்கு வலிமை உடையதாக, அதே நேரம், அதிக வார்ப்புத்தன்மை கொண்டதாகவும் பிரத்யேகமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: