மடிப்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் மாசு: பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஆலந்தூர்: மடிப்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மடிப்பாக்கம் கார்த்திகேயபுரத்திற்கும், அய்யப்பன்நகருக்கும் இடையே சுமார் 100 ஏக்கர் பரப்பலவில் ஏரி உள்ளது. இந்த ஏரி ஆக்கிரமிப்பாளர்களால் சுருங்கி தற்போது 65 ஏக்கர் அளவில் உள்ளது. மடிப்பாக்கம், மூவரசன்பட்டு, உள்ளகரம், புழுதிவாக்கம் போன்ற பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கிய இந்த ஏரி சென்னை நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பலகோடி செலவில் தூர்வாரப்பட்டு வந்தது. ஆனால் சரிவர பணி முடிவு பெறாத நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்காக நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் துவங்கப்படவில்லை.  

இந்நிலையில் அண்மையில் பெய்த  மழையினால் இந்த  ஏரி ஓரளவிற்கு நிரம்பியது. தற்போது இந்த ஏரியில் சாக்கடை நீர் கலந்து பச்சையாக மாறி துர்நாற்றம் வீசி கொண்டிருக்கிறது. காரணம், மடிப்பாக்கம் மற்றும் பல்லாவரம் நகராட்சி பகுதியில் இருந்து  வெளிவரும் சாக்கடை நீர் கழிவுகள் ஏரியில் கலக்கிறது.

இதனால் ஏரி மாசுபடுகிறது. கடந்த 15 நாட்களாக இந்த நிலை நீடிக்கிறது. இதுகுறித்து அந்த பகுதி நலச்சங்கத்தினர் பெருங்குடி மண்டல மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து மடிப்பாக்கம் அய்யப்பன் நகர நலச்சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘மடிப்பாக்கம் ஏரி முறையாக தூர்வாரப்படவில்லை. படித்துறை சரிவர அமைக்கப்படவில்லை. பறவைகள் சரணாலய மேடை போன்ற பணிகள் துவக்கப்படவே இல்லை.  தற்போது இந்த ஏரியில் ஒரு பகுதி கழிவுநீரால் சூழப்பட்டு பச்சை நிறத்திற்கு மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த பகுதியில்  வசிக்கும் மக்கள் வாக்கிங் செல்லவும் முடியவில்லை. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் அக்கறை செலுத்துவது இல்லை. இந்த கழிவுகளை அகற்றி ஏரிநீரை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: