சாலை விபத்தில் பலியான பெண் குடும்பத்துக்கு 22.54 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சாலை விபத்தில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு 22.54 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர், நகரை சேர்ந்தவர் ஸ்டெல்லா மேரி (29). கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2014 ஆகஸ்ட் 8ம் தேதி, ஆற்காடு சாலையில், மோட்டார் சைக்கிளில் பின்புறம் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னே வேன் ஒன்று சாலை விதிகளை மீறி மிக வேகமாக வந்துள்ளது. பின்னர் அந்த வேன் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஸ்டெல்லா சென்ற பைக் மீது மோதியது.

இதில் ஸ்டெல்லா தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். இதையடுத்து அருகே இருந்தவர்கள் படுகாயமைடந்த ஸ்டெல்லாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஸ்டெல்லா உயிரிழந்தார். இதையடுத்து ஸ்டெல்லா மேரியின் இறப்பிற்கு இழப்பீடு வழங்க கோரி, அவரது கணவரும், இரண்டு குழந்தைகளும், சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை, நீதிபதி ம.சிவசக்தி முன்பு நடந்தது. அப்போது நீதிபதி, வேனை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், சாலை விதிகளை மீறியும் ஓட்டியது நிரூபணமாகி உள்ளது. எனவே, மனுதாரர்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம், இழப்பீடாக 22.54 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கூறி உத்தரவிட்டார்.

Related Stories: