எதை விற்றால் பணம் வரும் என்று தவிக்கிறது அரசு: என்.துரைப்பாண்டியன், மத்திய அரசு ஊழியர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர்

மத்திய அரசாங்கம் கிட்டத்தட்ட திவாலான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அவர்கள் போட்ட பட்ஜெட்டில் ரூ.13.50 லட்சம் கோடிக்கு வரி வருமானம் வர வேண்டும். நேர்முக வரி, ஜிஎஸ்டி எனப்படுகிற மறைமுக வரி வர வேண்டும். இவர்கள் எதிர்பார்த்த வரி வருவாய் ஜிஎஸ்டியிலும் வரவில்லை. வருமானவரி மூலமும் வரவில்லை. அப்போது ரூ.13.50 லட்சம் கோடி வரி வருவாய் நிர்ணயித்தார்கள். ஆனால், இப்போது வரை ரூ.7.50 லட்சம் கோடி தான் வந்துள்ளது. இன்னும் ரூ.6 லட்சம் கோடி அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் அவர்கள் ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டும். ஜிஎஸ்டி வரியை ஏற்ற வேண்டும்.அதாவது ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தை 10 சதவீதம் ஆகவும், 12 சதவீதத்தை 15 சதவீதம் ஆக்கவும் அவர்கள் உயர்த்த திட்டமிட்டு உள்ளனர். அதே நேரத்தில் சில பொருட்களுக்கான வரியை இணைத்தும் ஒரே வரியை விதிக்கலாமா எனவும் யோசித்து வருகின்றனர்.  

ஜிஎஸ்டி வரி என்பது முடிவு வரி (end tax) ஆகும். இந்த வரி கடைசியில் நுகர்வோரிடம் தான் முடிகிறது. இந்த வரி சாதாரண ஆடைக்கு கூட போடப்பட்டுள்ளது. உப்புக்கும் வரி போட்டுள்ளனர். பாக்கெட்டில் போடப்படும் பிஸ்கட்டுக்கும் வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரியை உயர்த்தும் பட்சத்தில் அரசு மீது மக்களுக்கு கோபம் தான் வரும். ஏற்கனவே போராட்டங்கள் பரவி வருகின்றன. மக்கள் அதிருப்தியும் அதிகரித்து வருகிறது. இனியும் அரசு உஷாராக இருக்காவிட்டால், அடுத்தடுத்து சரிவுகள் தொடரும். இதை அரசு துல்லியமாக கணக்கிட்டு சரி செய்ய வேண்டிய கட்டாய நிலை இப்போது உள்ளது.

 மத்திய அரசு எதை விற்றால் பணம் வரும் என்று அவர்கள் அலைந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு பொதுத்துறையை விற்பது எப்படி, ரயில் கட்டணத்தை உயர்த்துவது எப்படி என்று ஆலோசித்து வருகின்றனர். அதிலும் தோல்வி தான். பொதுத்துறை பங்குகளை ரூ.1.50 லட்சம் கோடி கிடைக்கும் என எண்ணி இருந்தனர். ஆனால், அந்த இலக்கை எட்ட முடியவில்லை. கார்ப்பரேட் வரியை குறைத்தனர். இதனால், மத்திய அரசுக்கு ரூ.1.45 லட்சம் கோடி வரி வருவாய் குறைவு ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியை வேறு குறைத்தனர். இதனால், ரூ.3 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய அரசு என்ன தான் செய்யப்போகிறது என்பதே கேள்விக்குறியாக உள்ளது.

இந்திய அரசாங்கம் அரசியலமைப்பு சட்டம் 360ன் கீழ் பொருளாதார அவசர நிலை கொண்டு வரலாமா என்றும் யோசித்து வருகின்றனர். அப்படி பொருளாதார அவசர நிலை கொண்டு வந்தால் அரசாங்கம் கருவூல ரசீது, நிதி சம்பந்தமான மசோதா நிறைவேற்றாமல் தள்ளி வைக்கலாம். இந்த அரசாங்கம் அவசர கதியில் ஜிஎஸ்டி வரியை கொண்டு வந்தனர். இந்த சட்டம் அவசரமாக கொண்டு வந்ததால் சரியாக மென்பொருளை கொண்டு வரவில்லை. இங்குள்ள வியாபாரிகளுக்கு அவர்களால் இணையதளத்தில் அப்டேட் செய்யவில்லை. அவ்வாறு அப்டேட் செய்து கட்டணம் செலுத்தியவர்களால் ரீபண்ட் வாங்க முடியவில்லை. எத்தனை கோடி பைல் நிலுவையில் இருக்கிறது என்பது அவர்களுக்கே தெரியவில்லை.  இருந்தாலும் இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று  தெரியவில்லை. இப்போது தான் பொருளாதார தோல்வியை பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். இப்போதைய நிலையில் ஜிஎஸ்டி வரி, ரயில்வே கட்டணத்தை உயர்த்தியே ஆக வேண்டும். பொதுத்துறை பங்குகளை ஒட்டு மொத்தமாக விற்றே ஆக வேண்டும் என்கிற நிலையில் தான் மத்திய அரசு உள்ளது.மத்திய அரசுக்கு ₹1.45 லட்சம் கோடி வரி வருவாய் குறைவு ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியை வேறு குறைத்தனர். இதனால், ₹3 லட்சம் கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

Related Stories: