4 ஆண்டுகளுக்கு பின் களக்காடு பச்சையாறு அணை நிரம்பியது

*விவசாயிகள் மகிழ்ச்சி

களக்காடு : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் களக்காடு பச்சையாறு அணை 4 ஆண்டுகளுக்கு பின் நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம், களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் பச்சையாறு அணை அமைந்துள்ளது. இதன் மொத்த நீர்மட்டம் 50 அடி ஆகும். இந்த அணையின் மூலம் களக்காடு, நாங்குநேரி பகுதியில் உள்ள 110 குளங்கள் பயன்பெற்று வருகின்றன. 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறுகின்றன.

கடந்த 2001ம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பச்சையாறு அணை திறக்கப்பட்டது. அப்போது முழு கொள்ளளவான 50 அடியை எட்டியது. அதன் பிறகு கடந்த 2009, 2014, 2015ம் ஆண்டு மழையின்போது அணை நிரம்பி ததும்பியது. பின்னர் அணை நிரம்பவில்லை. அணை முழு கொள்ளளவை எட்டுவதற்கு முன்பே தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணைக்கு தேங்காய் உருளி அருவி அருகே உள்ள ஊட்டு கால்வாய் மூலமே தண்ணீர் திறக்கப்படுகிறது. இதுதவிர கீரைக்காரன் தொண்டு மலையில் பெய்யும் தண்ணீரும் அணைக்கு வந்து சேர்கிறது.

இந்நிலையில் களக்காடு பகுதியில் கடந்த சில மாதங்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வந்தது. பச்சையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கீரைக்காரன் தொண்டு மலைப்பகுதியிலும் தொடர் மழை பெய்தது. இதனால் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர தொடங்கியது. டிசம்பர் முதல் வாரத்தில் அணை நீர்மட்டம் 33 அடியாக இருந்தது. அதன் பின்னர் கடந்த வாரம் அணையின் நீர்மட்டம் மேலும் உயர்ந்து 47 அடியை எட்டியது.  இதனிடையே களக்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லை. எனினும் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இதையடுத்து பச்சையாறு அணை நேற்று முழு கொள்ளளவான 50 அடியை எட்டி நிரம்பியது. அணைக்கு வரும் தண்ணீர் உபரிநீர் வெளியேறும் மறுகால் வழியாக வழிந்தோடுகிறது. இந்த தண்ணீர் பச்சையாற்றில் திருப்பி விடப்பட்டுள்ளதால் ஆற்றிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. தொடர்ந்து அணைக்கு விநாடிக்கு 100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த 2015ம் ஆண்டுக்கு பின் பச்சையாறு அணை நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது

பச்சையாறு அணை மூலம் பாசனம் பெறும் 110 குளங்களிலும் தண்ணீர் நிரம்பியுள்ளது. தற்போதைய நிலவரப்படி விவசாயத்திற்கு போதுமான அளவு தண்ணீர் குளங்களில் உள்ளது. கோடை காலங்களில்தான் இனி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. பச்சையாறு அணையும் நிரம்பியுள்ளதால், அச்சமயத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டால், வருகிற கோடையிலும் இந்தாண்டு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான குளியல்

பச்சையாறு அணை நிரம்பி  கடல்போல் காட்சியளிக்கிறது. இதனை காண சுற்றுலா பயணிகளும் வர தொடங்கி உள்ளனர். அணைக்கு வரும் இளைஞர்கள் அணையின் உபரிநீர் வெளியேறும் பகுதியில் ஆபத்தை உணராமல் டைவ் அடித்து குளிக்கின்றனர்.

Related Stories: