திருச்சி மாணவி மர்மச்சாவு எதிரொலி நித்தியானந்தா கைதாவாரா?: கர்நாடக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்

பெங்களூரு: பாலியல் பலாத்காரம், கொலை உள்பட பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள நித்தியானந்தாவை கைது செய்து இந்தியா கொண்டு வரக் கோரி மாநில அரசின் சார்பில் முறைப்படி விண்ணப்பம் கொடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரியவருகிறது. ஆசிரமத்தில் பெண் சீடர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுகிறது என்றும், பெண் சீடர் ஆரத்திராவ் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்றும் புகார்கள் எழுந்தன. நித்தியானந்தா மீது பிடதி போலீஸ் நிலையத்தில் பல புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் ராம்நகரம் நீதிமன்றத்தில் 13 வழக்குகளின் விசாரணையும் நடந்து வருகிறது. 44 வழக்குகளின் விசாரணைக்கு நித்தியானந்தா ஆஜராகாமல் புறக்கணித்து வருகிறார். தற்ேபாது அவர் வெளிநாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியது. வெளிநாட்டிற்கு தப்பியோடியுள்ள நித்தியானந்தாவை இந்தியா கொண்டு வரும்படி லெனின் கருப்பன் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில்,நித்தியானந்தா ஆசிரமத்தில் மரணமடைந்ததாக கூறப்படும் சங்கீதா என்ற மாணவியின் தாயார் ஜான்சி ராணி மற்றும் நித்தியானந்தாவால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக கூறப்படும் ஆரத்திராவ் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதினார்கள்.

அதை பரிசீலனை செய்த மத்திய உள்துறை அமைச்சகம் கர்நாடக மாநில உள்துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நித்யானந்தா மீது நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் பலர், வெளிநாட்டில் பதுங்கியுள்ள அவரை கைது செய்து இந்தியா அழைத்து வந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கடிதம் எழுதியுள்ளனர். நித்தியானந்தா மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள், இது தொடர்பாக நடந்து வரும் நீதிமன்ற விசாரணையின் விவரம் தெரிவிக்க வேண்டும். நித்தியானந்தா வெளிநாடு தப்பியோடி இருந்தால், அவரை சட்டப்படி இன்டர்போல் மூலம் கொண்டு வரும் முயற்சியை சிபிஐ உள்ளிட்ட ஏஜென்சிகள் மூலம் ேமற்ெகாள்ள வேண்டும்  என்று உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நீதிமன்றத்தில் நித்தியானந்தாவுக்கு எதிராக நடந்து வரும் வழக்கு விசாரணை வரும் ஜனவரி 16ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்று நித்தியானந்தாவை ஆஜர்படுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ விசாரணை தேவை தாய் ஜான்சிராணி பேட்டி

இறந்த சங்கீதாவின் தாய் ஜான்சிராணி கூறியதாவது: 2006ம் ஆண்டு முதல் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் தியான வகுப்புக்கு சென்று வந்தேன். எனது மகள் சங்கீதா  பெங்களூரு ஆசிரமத்தில் தங்கிய போது அவளை மூளைச்சலவை செய்து அனுப்ப மறுத்தனர். சங்கீதாவை வீட்டுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டேன். அனுப்ப மறுத்தனர். 2014 டிசம்பர் 28ம் தேதி சங்கீதாவுக்கு நெஞ்சு வலி என்றனர். நான் போவதற்குள், அவள் இறந்துவிட்டதாக கூறினர். திருச்சி ராம்ஜிநகர் போலீசில் புகார் அளித்தேன். புகாரை வாங்க மறுத்தனர். அதன்பின், பெங்களூருவில் ராம்நகர் போலீசில் அளித்த புகார் நீண்ட போராட்டத்துக்கு பின் ஏற்று கொள்ளப்பட்டது. மறு பிரேத பரிசோதனையில் எனது மகளின் உடலில் முக்கிய உறுப்புகள் மாயமானதும், மூளைக்கு பதிலாக துணியை வைத்து இருந்ததும் தெரியவந்தது. ஆனால், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டனர். தற்போது சி.பி.ஐ. விசாரணை கேட்டு அனுப்பிய மனு மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனது மகளின் ஆன்மா நிச்சயம் அவளை கொன்றவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: