நீர்வளங்களை பாதுகாத்தல், நதிகள் சீரமைப்பு தலைவர் சத்யகோபால் அலுவலக அறையை காலி செய்ய உத்தரவு

* மாற்று இடம் ஒதுக்காமல் இழுத்தடிப்பு

* ராஜினாமா செய்வாரா என பரபரப்பு

சென்னை: நீர்வளங்களை பாதுகாத்தல், நதிகள் சீரமைப்பு தலைவர் சத்யகோபால் அலுவலகம் தலைமை செயலகத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது அலுவலக அறையை காலி செய்ய உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகளை சீரமைக்கும் பணிகளை செயல்படுத்த தமிழ்நாடு நீர்வள ஆதாரங்களை பாதுகாத்தல் மற்றும் நதிகள் சீரமைப்பு கழகம் என்ற அமைப்பு ஏற்படுத்தி கடந்தாண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த கழகம் மூலம் நதிகள் இணைப்பு திட்டம், கால்வாய்கள் இணைப்பு திட்டம், பருவ நிலை மாற்றம், பாசன உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், தடுப்பணை, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துதல், வெள்ள தடுப்பு திட்ட பணிகள், அணை, ஏரிகள் மின் உற்பத்தி நிலையம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் ₹6 ஆயிரம் கோடி செலவில் இந்த கழகம் மூலம் நீர்வளத்துறை திட்ட பணிகள் செயல்படுத்தப்படுகிறது. இந்த கழகத்தலைவராக சத்ய கோபால் நியமனம் செய்து கடந்த அக்டோபரில் தமிழக அரசு உத்தரவிட்டது. இவருக்கு, தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 5வது தளத்தில் அரசு செயலாளர் மணிவாசன் அறை அருகே தற்காலிகமாக சத்யகோபாலுக்கு அறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது அந்த அறை ேவறொரு அதிகாரிக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே அவரை காலி செய்யுமாறும் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு தரமணியில் நீர் ஆய்வு நிறுவனத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்படவிருந்தது. ஆனால், அங்கிருந்து தினமும் தலைமை செயலகத்துக்கு வருவது மிக கடினம். எனவே,  சத்யகோபால் காமராஜர் சாலையில் உள்ள பாலாறு இல்லத்தில் இடம் ஒதுக்கீடு செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளார். ஆனால், அங்கு தற்போது பாலாறு வடிநில வட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இதனால், அந்த இடத்தில் அவருக்கு ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த கழகம் அமைத்ததில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விருப்பம் இல்லாத நிலையில், அதனாலேயே அவருக்கு இடம் ஒதுக்கீடு செய்யாமல் தாமதம் செய்து வருவதாக ஊழியர்கள் சிலர் தெரிவித்தனர். அலுவலகம் தராமல் இழுத்தடிப்பதை அவமானமாக கருதும் சத்யகோபால் தன் பதவியை ராஜினாமா செய்யலாமா என்று யோசித்து வருவதாக அவரது அலுவலக வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.

Related Stories: