என்.தட்டக்கல் கிராமத்தில் அபாயகரமான நிலையில் உள்ள தொகுப்பு வீடுகள்: புதுப்பிக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி:  காவேரிப்பட்டணம் ஒன்றியம் என்.தட்டக்கல் கிராமத்தில், இடிந்து  விழும் ஆபத்தான நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை, புதுப்பித்து தரவேண்டும்  என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காவேரிப்பட்டணம் ஒன்றியம், நாகோஜனஹள்ளி பேரூராட்சி என்.தட்டக்கல்  கிராமம், மலுவராயன் தெருவில் இருளர் இன மக்களுக்காக, கடந்த 1997ம் ஆண்டு 12 தொகுப்பு வீடுகள்  கட்டித்தரப்பட்டன. ஒவ்வொரு வீட்டிலும் 2 குடும்பம்  வீதம் 45க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த  வீடுகள், கடந்த 10 ஆண்டுகளாக சேதமடைந்து, இடிந்து விழும் ஆபத்தான நிலையில்  உள்ளன. வீட்டின் மேற்கூரைகளில் உள்ள சிமெண்ட் பூச்சு பெயர்ந்து  விழுந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும், சுவற்றில் பல இடங்களில்  விரிசல் ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் தண்ணீர்  ஒழுகுவதோடு, தரை முழுவதும் ஈரமாகி விடுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இந்த வீடுகள் உள்ளன.

இதுகுறித்து அங்கு வசிக்கும் மக்கள் கூறியதாவது: இந்த தொகுப்பு  வீடுகள் கட்டப்பட்டு 32 ஆண்டுகளாகி விட்டதால், சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அச்சத்துடனேயே,  குழந்தைகளுடன் வீட்டில் தங்கியிருக்கிறோம். மேலும் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி  இல்லாததால், பல இடங்களில் கழிவுநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகிறது.  சாலையும் இதுவரை அமைக்கப்படவில்லை. இங்கு வசிப்பவர்களில் 3 பேரை தவிர,  மற்றவர்களுக்கு இதுவரை சாதிச்சான்று வழங்கப்படவில்லை. இதுகுறித்து  கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும், நடவடிக்கை  எடுக்கவில்லை. எனவே, இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த வீடுகளை அடித்து அகற்றி விட்டு, புதிதாக கட்டி தர வேண்டும். மேலும், எங்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: