2031ம் ஆண்டில் தேனியில் முழு சூரிய கிரகணம் அதிகளவில் தெரியும்: பிர்லா கோளரங்கின் அறிவியல், தொழில்நுட்ப மைய இயக்குனர் பேட்டி

சென்னை : 2031ம் ஆண்டில் தேனியில் முழு சூரிய கிரகணம் அதிகளவில் தெரியும் என்று சென்னை பிர்லா கோளரங்கில் தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் சௌந்தரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். இன்று அரிய வகை நிகழ்வான நெருப்பு வளைய சூரியகிரகணம் நிறைவடைந்தது. காலை 8.10 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் 11.16 மணி வரை நீடித்த்தது. சூரிய கிரகணத்தை உலகின் பல நாடுகளில் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

பிர்லா கோளரங்கின் செயல் இயக்குனர் பேட்டி

இந்நிலையில் சூரிய கிரகணம் குறித்து சென்னை பிர்லா கோளரங்கில் தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் சௌந்தரராஜ பெருமாள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், நெருப்பு வளைய சூரிய கிரகணத்தால் இருள் சூழ்ந்து,மாலை நேரம் போல் வானம் காட்சியளித்ததாக கூறினார். மேலும் பிர்லா கோளரங்கத்தின் சுமார் 6 ஆயிரம் பேர் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்த்து ரசித்தனர் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், புற ஊதாக் கதிர்கள் விழித்திரை செல்களை பாதிக்கும் என்பதால் வெறும் கண்களால் பார்க்கக் கூடாது, ஆகவே பொதுமக்கள் சூரிய கிரகணத்தை பார்க்க சிறப்பு கண்ணாடிகள் வழங்கப்பட்டன என்று விளக்கம் அளித்தார். மேலும் அவர் கூறுகையில்,உதகை முதல் புதுக்கோட்டை வரை கிரகணம் காலை 8.09 மணி முதல் 11.19 மணி வரை நிகழ்ந்தது. சென்னையில் 8.09 மணிக்கு சூரியனை மறைக்க தொடங்கிய நிலா 9.35 மணிக்கு 85% அளவுக்கு மறைத்திருந்தது. அடுத்தாண்டு சூரிய கிரகணம் அரை நிமிடம் குறைவாக தெரியும். 2031ம் ஆண்டில் தேனியில் முழு சூரிய கிரகணம் அதிகளவில் தெரியும். ஒளி மாறுபாடு பற்றி கல்லூரி மாணவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.2020ல் வட மாநிலங்களில் 80% தமிழ்நாட்டில் 20% கிரகணம் தெரியும் , என்றார்.

சூரியனை விட்டு முழுமையாக விலகியது சந்திரன்

காலை 8.08 மணியில் சூரியனை சிறுது சிறிதாக சந்திரன் மறைக்க தொடங்கியது. சரியாக 9 35 இல் இருந்து 3 நிமிடங்களுக்கு சூரியனை சந்திரன் முழுவதுமாக மறைக்கும் நிகழ்வு நடந்தது. அதன்பிறகு சூரியனின் நடுப்பகுதியை சந்திரன் மறைக்க தொடங்கியது. அதனால் சூரியனை சுற்றி நெருப்பு வடிவில் வளையம் ஒன்று தோன்றியது.  அதுவே நெருப்பு வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. பின் சூரியனை விட்டு மெல்ல விலகிய சந்திரன் சரியாக 11.19 மணிக்கு முழுமையாக விலகியது. அதன் பிறகு நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

Related Stories: