குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் குடிநீர் குழாய் சீரமைப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்துக்கு உட்பட்ட எர்ணாவூர் ஆல் இந்தியா ரேடியோ நகரில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள், சாலை விரிவாக்கத்தின் போது வீடுகளை இழந்தவர்கள் ஆகியோருக்கு மாற்று குடியிருப்பாக இங்கு வீடுகள் வழங்கப்பட்டு தற்போது 3500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு புழல் ஏரியில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் இங்கு கொண்டுவரப்பட்டு  குடியிருப்புக்கு அருகில் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி, பின்னர் மோட்டார் மூலம் குடியிருப்பின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டியில் நிரப்பப்பட்டு அதன்பின்னர் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இங்குள்ள குடிநீர் குழாய்கள் உடைந்து குடிநீர் வீணாகி வந்தது. மேலும் குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள குடிநீர் குழாய்கள் பழுதடைந்து இருப்பதால் குடிநீர் குடியிருப்பு கட்டிடத்தில் கசிந்து, பொதுமக்களுக்கு பயன்பட வேண்டிய பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகியது. இதுகுறித்து தினகரன் நாளிதழில் கடந்த 24ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் நேற்று காலை எர்ணாவூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு வந்தனர். ஊழியர்கள் மூலம் அங்கே பழுதடைந்த வால்வு மற்றும் குழாய்களை சீரமைத்து குடிநீர் கசிவதை தடுத்து நிறுத்தினர். குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் தினகரன் நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: