ஓட்டேரி நியூ பேரான்ஸ் சாலையில் மந்தகதியில் மழைநீர் கால்வாய் பணி: குப்பை குவியல், ஆக்கிரமிப்பு வாகனங்களால் இடையூறு

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி, திருவிக நகர் 6வது மண்டலம், 73வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த வார்டில் சமீப காலமாக துப்புரவு பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. குறிப்பாக, ஓட்டேரி நியூ பேரான்ஸ் சாலையில் இருபுறமும் பழைய வாகனங்களும் ஆட்டோக்கள் மற்றும் பழுதடைந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்களுக்கு பின்னால் குப்பை குவிந்துள்ளது. இதனை துப்புரவு ஊழியர்கள் அகற்றுவதே இல்லை.

பெரம்பூரில் இருந்து ஜமாலியா வழியாக புளியந்தோப்பு செல்வதற்கு இந்த சாலையை இருசக்கர வாகன ஓட்டிகளும் ஆட்டோ ஓட்டுனர்களும் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த பகுதியில் சென்றாலே துர்நாற்றம் வீசுவதால் சமீபகாலமாக இந்த வழியை வாகன ஓட்டிகள் பயன்படுத்தாமல் ஓட்டேரி ஸ்டாரன்ஸ் ரோடு  வழியாக சுற்றியே செல்கின்றனர். மேலும் அந்த சாலையில் மழைநீர் வடிகால் வாரிய பணிகள் கடந்த 6 மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டு தற்போது வரை ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி மர்ம காய்ச்சல் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஓட்டேரி காவல் நிலையம் எதிரே உள்ள சாலையில் தான் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த சாலையில் மாநகராட்சியின் இளநிலை உதவி பொறியாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. வாகனங்கள் அங்கு பல ஆண்டுகளாக நிறுத்துவது பற்றி போலீசாரும் கண்டுகொள்ளவில்லை. மேலும் சுகாதார சீர்கேடு பற்றி மாநகராட்சி அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. இதனால் அந்த சாலையை மக்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக கேட்பாரற்று கிடக்கும் அந்த வாகனங்களை அப்புறப்படுத்தி அந்த சாலையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மழைநீர் வடிகால் வாரிய பணிகளை துரிதப்படுத்தி  அந்த பகுதி மக்கள் நோயின்றி வாழ மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: