போலீஸ் ரெய்டுக்கு பயந்து விடுதியில் இருந்து கீழே குதித்தவர் பரிதாப பலி

பெரம்பூர்: கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகர், பாலகிருஷ்ண தெருவில் உள்ள தனியார் விடுதியில், பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக, நேற்று முன்தினம் மாலை கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் இரவு சுமார் 10 மணியளவில் சம்பவ இடத்திற்கு சென்று விடுதியின் முதல் மாடிக்கு சென்று கதவைத் தட்டினர்.அப்போது அறைக்குள் இருந்த 15க்கும் மேற்பட்டோர், போலீசார் வருவதை அறிந்து, ஜன்னல் வழியாக அக்கம் பக்கத்து வீடுகளின் மேற்கூரை மீது ஏறி குதித்து தப்பி ஓடினர். இதில், மகாகவி பாரதி நகரை சேர்ந்த பீட்டர் (45), தண்டையார்பேட்டையைச் சேர்ந்த செழியன் (53), வியாசர்பாடியை சேர்ந்த ராஜி (32), திருவல்லிக்கேணியை சேர்ந்த சந்திரசேகர் (41) ஆகிய 4 பேர் போலீசாரிடம் பிடிபட்டனர்.

மற்றவர்கள் வீடுகளின் மொட்டை மாடி வழியாக தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்டவர்களிடம் விசாரித்ததில், இவர்கள் அனைவரும் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், போலீசாரின் ரெய்டுக்கு பயந்து, பக்கத்தில் இருந்து, விடுதிக்கு பக்கத்தில் உள்ள பிளாஸ்டிக் குடோனின் மீது குதித்து ஒருவர் தப்பி ஓடியபோது, மேற்கூரை உடைந்து விழுந்ததில் அந்நபர் உள்ளே விழுந்து படுகாயம் அடைந்திருப்பதாக கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று, படுகாயமடைந்த நபரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விசாரணையில், அவர் சவுகார்பேட்டையை சேர்ந்த குமார் (40) என்பதும், அவர் விடுதியில் சூதாட்டம் ஆடிய நபர் எனத் தெரியவந்தது. இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொருக்குப்பேட்டையை சேர்ந்த கட்டிட உரிமையாளர் பாண்டியனை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: