மீரட் பகுதிக்கு சென்ற ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்: 144 தடை உள்ளதை சுட்டிக்காட்டி இரு தலைவர்களையும் தடுத்து நிறுத்தியது போலீஸ்

லக்னோ: உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் பகுதிக்கு சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரை நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் இருந்து அகதிகளாக வந்து இந்தியாவில் தங்கியுள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையிலான குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய பாஜ அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல், மாணவர்கள், பொதுமக்கள் என நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியிலும் போராட்டங்கள் தொடர்ந்து விரிவடைந்து கொண்டு வந்துகொண்டிருக்கும் நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி இன்றும் ஒரு மிகப்பெரிய பேரணியை நடத்தி வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மற்றும் அவரது தங்கை பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று உத்திரப்பிரதேசம் மாநிலம் மீரட் பகுதிக்கு சென்றனர்.

ஏற்கனவே நேற்று நாங்கள் இன்று மீரட்டுக்கு செல்வதாக அறிவித்திருந்தனர். உத்திரபிரதேசம் மாநிலத்தை பொறுத்தவரையில் குடியுரிமை சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு பிறகு அந்த மாநிலம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது. குறிப்பாக மீரட்டை பொறுத்தவரையில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றது. போலீசார் தடியடி நடத்தினர். அதே போன்று அங்கு நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானவர்கள் பலியாகியுள்ளனர். உ.பி.யை பொறுத்தவரையில் துப்பாக்கிச்சூடு, வன்முறை சம்பவங்களில் இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் உயிரிழந்த குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அங்கு சென்றுள்ளனர். ஆனால் மீரட் பகுதியை பொறுத்தவரையில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு பதட்டமான சூழல் இருந்து வருவதால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களை போலீசார் மீரட் நகருக்குள் நுழையும் முன்பு தடுத்து நிறுத்தினர். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இரண்டு பேரையும் வாகனத்தில் இருந்து இறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உத்திரப்பிரதேச போலீசார் கூறுகையில்; இப்பகுதியில் ஏற்கனவே போராட்டம் தொடர்ந்து நடைபெற்று பதட்டமான சூழல் இருந்து வருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்துவதற்கு அனுமதியில்லை. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களாக இருப்பதால் நீங்கள் இங்கு வந்தால் போராட்டம் நடத்துவதற்கு அதிகப்படியான மக்கள் கூடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த இடங்களில் பதட்டமான சூழல் ஏற்படும். எனவே இங்கிருந்து சென்றுவிடுங்கள் என்று உ.பி. போலீசார் அவர்களை தடுத்து இங்கிருந்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories: