சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என மாற்ற முடியாது: மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் குழு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் குழு நிராகரித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாட்களாக வக்கீல்களும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்து வருகின்றன.  இதையடுத்து, சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும், இது தொடர்பான பரிந்துரையை வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்திடம் மத்திய அரசு கேட்டது.இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அனைத்து நீதிபதிகள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அப்போது, சென்னை உயர் நீதிமன்ற அதிகார வரம்புக்குள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் புதுச்சேரி மாநிலமும் உள்ளது.

அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய முடியாது. பம்பாய் உயர் நீதிமன்றம், கல்கத்தா உயர் நீதிமன்றம் என்ற பெயர்களை மாற்றாமல் தொடர்ந்து அதே பெயர் நீடித்து வருகிறது. எனவே, சென்னை உயர் நீதிமன்றமும் அதன் பழமையான பெயருடனே இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல், நீதிபதிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர்களை பணி நீக்கம் செய்தல், பணி நீட்டிப்பு ரத்து, ஊதிய உயர்வு ரத்து உள்ளிட்ட முடிவுகளும் நீதிபதிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

 ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய நாமக்கல் மாவட்ட முன்னாள் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி மான்விழி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் ஓய்வு பெற அனுமதி தரப்படவில்லை. இந்நிலையில், அவரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டதுடன் அவர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டு வழக்கை அவர் சந்திக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.  முன்னாள் கிருஷ்ணகிரி மாவட்ட முன்சீப் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார்,ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் முதன்மை நீதிபதி டி.பொன்பிரகாஷ் ஆகியோர் குற்றச்சாட்டுகளில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இவர்கள் இருவரையும் பணி நீக்கம் செய்யவும் நீதிபதிகள் குழு பரிந்துரைத்துள்ளது.

மாவட்ட நீதிபதிகள் மீது நடவடிக்கை :

சென்னை சைதாப்பேட்டை 17வது மாஜிஸ்திரேட் என்.ராஜலட்சுமி மீது 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதுகுறித்து நடந்த விசாரணையில் 4 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு 5 முறை ஊதிய உயர்வை ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரை தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஜார்ஜ்டவுன் 8வது மாஜிஸ்திரேட் டி.ஜெயயையும் தீவிர கண்காணிப்பில் வைத்திருக்க உத்தரவிட்டதுடன் அவரது ஊதிய உயர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேன்கனிக்கோட்டை முன்சீப் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சாவித்திரிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீதும் விசாரிக்கப்பட்டது. ஏற்கனவே அவருக்கு ஊதிய உயர்வு நிறுத்தப்பட்டுள்ளதால், அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல் அவருக்கு நீதிபதிகள் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், 55 முதல் 58 வயது வரையிலான 8 மாவட்ட நீதிபதிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கவும் நீதிபதிகள் குழு மறுத்துள்ளது.

* சென்னை உயர் நீதிமன்ற அதிகார வரம்புக்குள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் புதுச்சேரி மாநிலமும் உள்ளது. அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர் நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய முடியாது.

Related Stories: