தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சியை முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை தீவுத்திடலில் 46வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார். பொருட்காட்சியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இந்த ஆண்டு பொருட்காட்சி, கிறிஸ்துமஸுக்கு முன்னரே தொடங்கி வைக்கப்பட்டிருப்பது கூடுதல் விசேஷமாகும். இப்பொருட்காட்சியில் மாநிலத்தின் 28 அரசுத் துறைகள், 14 மாநில பொதுத் துறை நிறுவனங்கள், ஒரு மத்திய அரசு நிறுவனம், 4 பிற மாநில அரசு நிறுவனங்கள், தமிழ்நாடு சட்ட உதவி மையம் மற்றும் 110 தனியார் அரங்குகள் இடம் பெற்றுள்ளன.

குழந்தைகளுக்காகவும், பெரியவர்களுக்காகவும் பொழுதுபோக்கு அம்சங்களும் இந்தப் பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பனி உலகம், கடல்வாழ் மீன் அருங்காட்சியகம், லேசர் ஷோ கண்காட்சி ஆகிய சிறப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. முன்னர் பணம் படைத்தவர்கள் மட்டுமே சென்று வந்த சுற்றுலா என்பது, தற்போது உலக மக்களின் தேவைகளில் ஒன்றாக மாறி வருகிறது. மக்களின் வாழ்க்கைத் தரம், போக்குவரத்தில் முன்னேற்றம், தரமான சாலைகள், விரைவான செய்தித் தொடர்பு வசதி போன்றவை சுற்றுலாவை ஒரு முக்கியமான தொழிலாக மாற்றியுள்ளன.சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தமிழ்நாடு, இந்தியாவிலேயே ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது.

இதனால், தமிழ்நாட்டிற்கு வருகை புரியும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் ஏராளமான சுற்றுலா தளங்கள் உள்ளன. யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரிய சின்னங்கள் அமைந்துள்ள மாமல்லபுரம், தஞ்சை பெரிய கோயில், தாராசுரம் திருக்கோயில், கங்கைகொண்ட சோழபுரம் திருக்கோயில் மற்றும் நீலகிரி மலை ரயில் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ளன.இந்தப் பொருட்காட்சியில் நேர்த்தியாக அரங்கங்களை அமைத்த அரசுத் துறை நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய, பிற மாநிலத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Related Stories: