இசிஆர், ஓஎம்ஆர் சாலைகளை இணைக்க ஆறு பாலங்கள் அமைப்பு: மாநகராட்சி தகவல்

சென்னை : இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையை இணைக்கும் திட்டத்தில் ₹30 கோடி மதிப்பீட்டில் 6 பாலங்கள் கட்டப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலைகள் போக்குவரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளாக உள்ளன. இப்பகுதியில் ஐடி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள், தொழிற்சாலைகள் நிறைந்துள்ளன. எனவே, இந்தசாலைகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். இந்நிலையில் இந்த இரண்டு சாலைகளையும் இணைக்கும் வகையில் 6 பாலங்களை கட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பணிகள் துறை துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன், பாலங்களை துறை தலைமை பொறியாளர் ராஜேந்திரன், செயற்பொறியாளர் மனோகரன், உதவி செயற் பொறியாளர் கருப்பசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் திட்டத்தின் சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்வது மற்றும் மண் பரிசோதனை செய்வது தொடர்பான விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதன்படி இளங்கோ நகர் - வெங்கடேசபுரம், வெங்கடேசபுரம் - காந்தி சாலை, வீரமணி சாலை - மணியம்மை சாலை, மணியம்மை சாலை - அம்பேத்கர் சாலை, அண்ணா நகர் - பாண்டியன் சாலை , காந்தி நகர் - பல்லவன் ஆகிய 6 இடங்களில் பாலங்கள் கட்டப்படவுள்ளன. இந்த ஆறு சாலைகளில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. மண் பரிசோதனை மற்றும் சாத்திய கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நிறைவடைந்தவுடன் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடையாற்றில் 2 பாலம்

அடையாறு ஆற்றுக்கு இடையில் இரண்டு பாலங்களை கட்ட விரிவான திட்ட அறிக்கை மாநகராட்சி சார்பில் தயார் செய்யப்பட்டுள்ளது. நெசப்பாக்கம் - நந்தம்பாக்கம், கானு நகர் - டிபன்ஸ் காலனி ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்த பாலம் கட்டப்படவுள்ளது.

Related Stories: