தமிழகத்தில் நன்னடத்தை கைதிகளால் சிறைகளில் தயாரிக்கும் பொருட்கள் ஆன்லைனில் விற்பனை: இறுதிக் கட்ட பணிகள் தீவிரம்

வேலூர்: தமிழகத்தில் நன்னடத்தை கைதிகளால் தயாரிக்கப்படும் பொருட்களை ஆன்லைனில் விற்கும் நடவடிக்கைக்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளன. தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் கைத்தொழிலாக டெய்லரிங், ஷூக்கள் தயாரிப்பு, போலீஸ் சீருடைகள் தைத்தல், விவசாயம், பேக்கரி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் மூலம்  அவர்கள் வருமானமும் சம்பாதிக்கின்றனர். சென்னை புழல் சிறையில் பேக்கரி மற்றும் உணவுப்பொருட்கள், வேலூர் சிறையில் தோல் பொருட்கள், திருச்சி சிறையில் முறுக்கு, மதுரை சிறையில் மீன் வளர்ப்பு, திருச்சி பெண்கள் சிறையில் நைட்டி, ஊறுகாய் உள்ளி ட்ட 250 விதமான  பொருட்களை கைதிகள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

பெண்கள் சிறைகளில் எம்ராய்டரிங், பிளாஸ்டிக் உபயோக பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது சிறைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் விற்பனை செய்வதற்காக சிறைத் துறை  அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் கைதிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கைதிகள் உற்பத்தி  செய்யும் பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் மிக குறைந்த விலையிலும், தரமானதாகவும் கிடைக்கிறது. எனவே பொதுமக்கள் அதிகளவில் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

சிறைகளில் கைதிகளால் தயாரிக்கும் பொருட்களின் விவரம் மற்றும் விலை ஆகியவை குறித்து தெரிந்து கொள்ள தனி இணையதளம் துவங்க கடந்த 3 மாதங்களாக சிறைத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வந்தனர். தற்போது இந்த பணி  முடிவடைந்துள்ளது. இதன் அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி அவர்களின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.  இதன் மூலம் கைதிகளின் வருமானம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆன்லைன் விற்பனையில் முன்னோடியாக கேரள சிறைத்துறை

கேரள மாநில சிறைகளில் கைதிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக கைதிகள் தயாரிக்கும் சப்பாத்தி, கோழிக்கறி உட்பட பல்வேறு உணவுப் பொருட்கள் திருவனந்தபுரம், வையூர்  மத்திய சிறைச்சாலைகளில் விற்கப்படுகிறது. வையூர் சிறையில் கைதிகள் தயாரிக்கும் பிரியாணியை ஆன்லைனில் ரூ.127 செலுத்தினால், 300 கிராம் பிரியாணி, கோழிக்கால் வறுவல், 3 சப்பாத்திகள், ஒரு கப் கேக், சாலட், ஊறுகாய், ஒரு லிட்டர்  தண்ணீர் பாட்டில் மற்றும் வாழை இலை வழங்கப்படுகிறது. பிரியாணியை விநியோகம் செய்வதற்கு, தனியார் உணவு வினியோக நிறுவனத்துடன் சிறை அதிகாரிகள் ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படி, ஆன்லைன் விற்பனையை தொடங்கி  வையூர் சிறையில் இருந்து 6 கி.மீ. சுற்றளவுக்குள் வசிப்பவர்களுக்கு ஸ்விக்கி மூலம் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: