தமிழகத்துக்கு ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட ரூ.1,400 கோடி மத்திய அரசு விடுவிப்பு: நிலுவை தொகை கேட்டு மீண்டும் கடிதம் எழுத முடிவு

சென்னை: ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட தமிழகத்துக்கு ரூ.1,400 கோடி இழப்பு தொகை மத்திய அரசு விடுவித்துள்ளது என்று வணிகவரித்துறை அதிகாரி  தெரிவித்தார். நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்குகள் சேவை வரி கடந்த 2017 ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதுவரை சரக்குகளுக்கு மட்டுமே வரி வசூலித்து வந்த தமிழக அரசு சேவை வரிக்கும் சேர்த்து வசூலித்து வருகிறது. இருப்பினும், வருவாய் இலக்கை அடைய முடியாமல் வணிகவரித்துறை தவித்து வருகிறது. இந்நிலையில், வரி வருவாய் இலக்கை சமாளிக்க மத்திய அரசும் 5 ஆண்டுகளுக்கு மானியம் தரும் என்று உத்தரவாதம் அளித்து இருந்தது.

ஆனால், மத்திய அரசு அளித்த உத்தரவாதப்படி ரூ.7,500 கோடி தமிழக அரசுக்கு இழப்பு தொகை தர வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், மத்திய அரசு இந்த தொகையை தர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வணிகவரித்துறை ஆணையர் சோமநாதன் சில நாட்களுக்கு முன்பு மத்திய வருவாய்த்துறை, ஜிஎஸ்டி ஆணையத்துக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது.

இதே போன்று பல்வேறு மாநிலங்கள் சார்பிலும் மத்திய அரசு இழப்பு தொகை கேட்டு கடிதம் எழுதியது. இதை தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ரூ.33 ஆயிரம் கோடி நிலுவையில் உள்ள இழப்பு தொகை தருவதாக அறிவித்தது. இதில், ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுகட்ட தமிழகத்துக்கு ரூ.1,400 கோடி இழப்பு தொகை மத்திய அரசு விடுவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொகை மிகவும் குறைவு என்பதால், வணிகவரித்துறை சார்பில் மீண்டும் கடிதம் எழுத  முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.

Related Stories: