மத்திய அரசு துறைகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுப்பு கண்டித்து மனிதச்சங்கிலி போராட்டம்: சென்னையில் நடந்தது

சென்னை: மத்திய அரசின் துறைகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதை கண்டித்து, சென்னையில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது. மத்திய அரசுப் பணிகளில் சேரும் தமிழக இளைஞர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. மத்திய அரசின் துறைகளில் தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாகவும், தமிழகத்தில் உள்ள பணி காலியிடங்களுக்கு வெளி மாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை கண்டித்து, நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு தமிழ் தேசிய பேரியக்கம் சார்பில் பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் 250க்கும் மேற்பட்டவர்கள் மனிதசங்கிலியாக நின்று மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் தமிழர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும், வெளி மாநிலத்தவர்களை பணியில் அமர்த்த கூடாது என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர், தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய அரசு சார்பில் தமிழகத்தில் நடத்துகின்ற அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் நூற்றுக்கு 90 சதவீதம் வெளிமாநிலத்தவர்கள் குறிப்பாக இந்துக்களைத்தான் தேர்வு செய்கிறார்கள், தமிழர்களை புறக்கணிக்கிறார்கள். தமிழர்கள் சொந்த மண்ணிலேயே வேலைவாய்ப்பின்றி இன ஒதுக்கல் கொள்கைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். இதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மற்ற மாநிலங்களில் மண்ணின் மைந்தனுக்கு தான் வேலைவாய்ப்பு என்று சட்டம் இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஏதும் இல்லை. இதனை நிறைவேற்றுங்கள் என்று மாநில அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். மாநில அரசு அதற்கு செவி சாய்க்காமல் இருக்கிறது. 90 சதவீதம் வெளிமாநிலத்தவர்கள் தமிழகத்தில் வேலைவாய்ப்பு பெற்று இருக்கிறார்கள். அவர்களை வெளியேற்ற வேண்டும். வெளிமாநிலத்தில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருபவர்களை வணக்கம்.. நீங்கள் திரும்பிப் போங்கள்.. எங்களுடைய பிள்ளைகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்.. என்று கேட்டுக் கொள்ளும் வகையில் மனிதச்சங்கிலி போராட்டம் நடக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: