குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதாக திருமாவளவன், சித்தார்த் உள்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக திருமாவளவன், சித்தார்த், டி.எம்.கிருஷ்ணா உள்பட 600 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் இருந்து அகதிகளாக வந்து இந்தியாவில் தங்கியுள்ள முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை அளிக்கும் வகையிலான குடியுரிமை சட்ட திருத்தத்தை மத்திய பாஜ அரசு சமீபத்தில் அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, அசாம், மேற்குவங்கம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் போது மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தீவைப்பு சம்பவங்கள் நடந்து வன்முறை வெடித்தது. தற்போது தென்மாநிலங்களுக்கும் இந்த போராட்டம் பரவியுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நேற்று நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தப்பட்டது.  இப்போராட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், நடிகர் சித்தார்த் உள்ளிட்ட 600 பேர் மீது, 143 மற்றும் 41 பிரிவு 6 ஆகிய இரண்டு  பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: