குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட மாணவர்களுக்கு முழு உரிமை உள்ளது: நடிகர் சித்தார்த் பேட்டி

சென்னை: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட மாணவர்களுக்கு முழு உரிமை உள்ளது என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார். சில நாட்கள் முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதனை அடுத்து நாடு முழுவதும் உள்ள கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்திற்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.

அதேபோல், குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்ட நாளில் இருந்தே நடிகர் சித்தார்த், இதற்கு கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்திற்கு நேரில் சென்று நடிகர் சித்தார்த் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். இந்த போராட்டத்தில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்த மாணவர்கள் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். அங்குப் பேசிய நடிகர் சித்தார்த், குடியுரிமைக்கு எதிராக போராட மாணவர்களுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால், மாணவர்கள் வன்முறையில் ஈடுபடாமல் அமைதியான முறையில் போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் இந்திய குடிமகனாக்க நினைப்பவர்கள், இஸ்லாமியர்களை மட்டும் இந்தியர்கள் ஆக கூடாது என ஏன் நினைக்கிறார்கள் எனவும் கேள்வியெழுப்பியுள்ளார். இந்நிலையில், இந்த போராட்டத்தில் நடிகர் சித்தார்த்துடன் ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை, இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். 

Related Stories: