2020ம் ஆண்டு முதல் சர்ச்சைக்குரிய 737 மேக்ஸ் விமானங்களின் தயாரிப்பை நிறுத்த போயிங் நிறுவனம் முடிவு

புதுடெல்லி: 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சர்ச்சைக்குரிய போயிங் 737 மேக்ஸ் விமானங்களின் தயாரிப்பை நிறுத்த போயிங் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இத்தோனேசியா மற்றும் எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதில் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.  விமானத்தின் புதிய தொழில்நுட்ப அம்சத்தில் பழுது இருப்பதாக அச்சமயம் புகார் கூறப்பட்டது. இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறு காரணமாக 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா தடை விதிக்கப்பட்டிருந்தது. விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தாலும் விமான தயாரிப்பு பணிகளை போயிங் நிறுவனம் நிறுத்தவில்லை. 9 மாதங்களின் தடை வருகின்ற டிசம்பர் மாதத்தோடு முடிவதால் இந்த ஆண்டுக்குள் 737 மேக்ஸ் ரக விமானங்கள் பறப்பதற்கான தடை நீக்கப்படும் என்று போயிங் நம்பிக்கை தெரிவித்திருந்தது.

ஆனால் அமெரிக்கா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் 737 மேக்ஸ் ரக விமானங்கள் பறப்பதற்கு அத்தனை எளிதில் அனுமதி கிடைக்காது என தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து, வருகின்ற ஜனவரி மாதம் முதல் போயிங் 737 மேக்ஸ் ரக விமான தயாரிப்பை நிறுத்த இருப்பதாக போயிங் அறிவித்துள்ளது. மேலும், விமான தயாரிப்பை நிறுத்துவதால் விற்பனை  பாதிக்கப்பட்டாலும் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அமெரிக்க நிறுவனமான போயிங் உறுதியளித்துள்ளது. போயிங் நிர்வாகிகள் எதிர்பார்த்ததை விட நெருக்கடியிலிருந்து நிறுவனத்தின் மீட்பு நீண்ட காலத்திற்கு ஆகும் என்பதாலும், போயிங்கின் நிலைத்தன்மை மீது சந்தேகம் உருவாவதால், முதலீட்டாளர்கள் இடையே இது கடும் அச்சத்தை ஏற்படுத்தும் என்பதாலும், இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Stories: