செங்குன்றம் அருகே ஆயில், பர்னிச்சர் குடோனில் தீவிபத்து : பொருட்கள் எரிந்து நாசம்

புழல்: செங்குன்றம் அருகே ஆயில், பர்னிச்சர் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. செங்குன்றம் அடுத்த தண்டல்கழனி, ஜிஎன்டி சாலை அருகே தனியார் வளாகத்தில் ஆயில், பர்னிச்சர் மற்றும் அட்டை பெட்டி குடோன் உள்பட 10க்கும் மேற்பட்ட குடோன்கள் இயங்கி வருகின்றன. நேற்று அதிகாலை 4 மணியளவில் இங்குள்ள ஆயில் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றில் தீ மளமளவென அருகில் உள்ள பர்னிச்சர் குடோனுக்கும் பரவியது. இதனால் அங்கிருந்த பர்னிச்சர் பொருட்கள் கொழுந்துவிட்டு எரிந்தன. தகவலறிந்து செங்குன்றம், மாதவரம், மணலி, அம்பத்தூர் மற்றும் தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

அவர்கள் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி 2 குடோன்களில் பற்றிய தீயை அணைத்தனர். இருப்பினும் ஆயில் மற்றும் பர்னிச்சர் குடோன்களில் இருந்த ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதா? வேறு ஏதேனும் நாசவேலை காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: