ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான துணை வாக்காளர் பட்டியல் இன்று மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் தொடர்பான பணிகள் நடைபெற்று வந்ததால், 30-6-2019 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பட்டியல்தான் உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. எனவே இந்த பட்டியல் மாநில தேர்தல் ஆணையத்திடம் தற்போது வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக, வேட்புமனு தாக்கலுக்கு 10 நாட்களுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாய்ப்பு அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில், 6-12-2019 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களிடம் மனு வாங்கப்பட்டுள்ளது. இவர்களில் தகுதியான பெயர்களை, தேர்தல் ஆணையம் அனுமதியுடன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது.

இதையடுத்து, உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் அடங்கிய துணை வாக்காளர் பட்டியலுடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்படும். புதிதாக பெயர் சேர்க்க விண்ணம் அளித்தவர்கள், தங்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை தேர்தல் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்தியா முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, `தேர்தல் விழிப்புணர்வு - வலிமையான ஜனநாயகம்’’ என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதையொட்டி மாநில அளவில் பேச்சுப்போட்டி, கவிதை, படம், கோலம் வரையும் போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றிபெற்றவர்களுக்கு ஜனவரி 25ம் தேதி நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். அன்றையதினம் எல்லா வாக்குப்பதிவு மையங்களிலும் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதுடன், தேர்தலில் கண்டிப்பாக வாக்களிப்போம், வாக்களிக்க பணம் வாங்க மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: