அகஸ்தியர் அருவியில் குளிக்க மீண்டும் தடை: காரையாறு கோயிலுக்கு செல்லவும் அனுமதி மறுப்பு

வி.கே.புரம்: வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால், நெல்லை மாவட்ட மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பி வழிகின்றன. தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் கடந்த 28ம் தேதி முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றில் அதிகபட்சமாக 20 ஆயிரம் கன அடிநீர் வரை திறந்து விடப்பட்டதால், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லும் பாலமும், முண்டந்துறை பாலமும் தண்ணீரில் மூழ்கியது. இதன் காரணமாக பக்தர்களின் பாதுகாப்பு கருதி சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல கடந்த 28ம் தேதி முதல் 8ம் தேதி வரை வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் 9ம் தேதி மழை குறைந்து, வெள்ளப்பெருக்கும் தணிந்ததால் காரையாறு கோயிலுக்கு அரசு பஸ்களில் செல்ல பக்தர்களுக்கு வனத்துறையினர் அனுமதி அளித்தனர். சொந்த வாகனங்களில் கோயிலுக்கு செல்ல 10ம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டது.

 இதேபோல் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் அகஸ்தியர் அருவியிலும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 15 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் குளிக்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீருடன் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் கல்யாண தீர்த்தம் வழியாக அகஸ்தியர் அருவியில் பாய்ந்ததால் மீண்டும் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு சொந்த வாகனங்களில் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் அரசு பஸ்களில் செல்வதற்கு வழக்கம்போல் வனத்துறையினர் அனுமதி அளித்தனர். பாபநாசம் கோயில் முன்புள்ள படித்துறையிலும் பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. யாரும் ஆற்றில் இறங்கி குளிக்காமல் இருக்க அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: