மழைக்காலங்களில் கிடைக்கும் நீர் வீணாவதை தடுக்க பரம்பிகுளம் அணை அருகே கேரள அரசு புதிய அணை : நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் கேரள அதிகாரிகள் தகவல்

சென்னை: மழைக்காலங்களில் கிடைக்கும் நீர் வீணாவதை தடுக்க பரம்பிகுளம் அணை அருகே கேரள அரசு புதிய அணை கட்டி தருவதாக நதிநீர் பங்கீடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கேரளா அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு, தமிழக அதிகாரிகள் முதல்வரிடம் பேசி முடிவு செய்வதாக தெரிவித்தனர். பரம்பிகுளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் புதுப்பிப்பது தொடர்பாக  தமிழக-கேரள அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பேசப்பட்டது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: பரம்பிகுளம்- ஆழியாறு திட்டத்தில் 1960ல் போடப்பட்ட ஒப்பந்தம் பல நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக உள்ளது. இதை சரி செய்வது தான் இந்த பேச்சுவார்த்தையின் நோக்கம். அதன்படி எவ்வளவு மழை பெய்கிறது, எவ்வளவு தண்ணீர் வருகிறது, எவ்வளவு நீர் இருப்பு இருக்கிறது என்பதை கணக்கிடப்பட்டு தண்ணீர் தருவதை முறைப்படுத்துவதற்கான கூட்டம் தான் இது. இரு மாநில அரசு சார்பில் இந்த தண்ணீரை பகிர்ந்து கொள்ளலாம் என்பது தொடர்பாக ஆண்டுக்கு இரண்டு முறை கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தை 3 மாதத்துக்கு ஒரு முறை நடத்த இக்கூட்டத்தல் முடிவு செய்யப்பட்டது. அப்போது தான் தண்ணீர் வருவது, அதை பகிர்ந்து கொள்வது என்பது குறித்து சரியாக முடிவு எடுக்க முடியும் என்று கேரளா தரப்பு தெரிவித்தது. இதை முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும் என்று தமிழக அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தது. சில திட்டங்கள் ஒப்பந்தத்தில் துணை ஒப்பந்தங்களாக இருந்தது. இதனால், திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதை வருங்கால கூட்டத்தில் முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. மழை இல்லாத காலங்களில் தண்ணீர் இல்லை. மழைக்காலங்களில் கூடுதலாக தண்ணீர் வருகிறது. எனவே, மழைகாலங்களில் மூலம் கிடைக்கும் தண்ணீர் வீணாவதை தடுக்க புதிய நீர்த்தேக்கம் அமைத்தோ, புதிய சுரங்கம் அமைத்தோ சேமித்து வைக்க புதிய திட்டம் கொண்டு வருவது தொடர்பாக பின்னர் பேசிக்கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பரம்பிகுளம்-ஆழியாறு திட்டத்தில் கேரளாவுக்கும் தண்ணீர் தரப்படுகிறது. இருப்பினும் 30 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் தேவை அதிகரிக்கும் என்பதால் அதற்கேற்ப திட்டங்களை தீட்டுங்கள் என்று கேரள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அணை கட்டி நமக்கு தண்ணீர் வருவதாக கூறினார்கள். அப்போது, நாங்கள் கட்டி தருகிறோம் என்றோம். இல்லை நாங்கள் கட்டி தருகிறோம். மேலும், புதிய அணை எங்கு அமைப்பது என்பது தொடர்பாக வரைபடம் தயாரித்து தருகிறோம் என்று கூறினார்கள். அடுத்த கூட்டம் பிப்ரவரியில் நடைபெறும். அந்த கூட்டத்தில் முதல்வரிடம் பேசி இது தொடர்பாக முடிவு சொல்கிறோம் என்றோம். இவ்வாறு இக்கூட்டத்தில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories: