தலைமைச் செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவருக்கு சிறை

சென்னை: சென்னை தலைமைச் செயலகம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் மைசூரை சேர்ந்தவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை தலைமை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  சென்னை, அரசு தலைமைச் செயலகம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என கடந்த 2007ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்க்கு மர்ம நபர் ஒருவர் மிரட்டல் கடிதம் அனுப்பியிருந்தார். இதுதொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கர்நாடக மாநிலம் மைசூரைச் சேர்ந்த ஸ்டாலின் சாஜின் (37) என்பவர் வேறு ஒருவரின் பெயரில்  மர்ம கடிதம் போட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் சாஜினை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை எழும்பூரில் உள்ள பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அரசு உதவி வழக்கறிஞர் வாஷிங்டன்  ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த பெருநகர தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் ரவி, குற்றம் சாட்டப்பட்ட ஸ்டாலின் சாஜினுக்கு 2 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 2 ஆயிரம் அபராதம் விதித்து  தீர்ப்பளித்தார்.

Related Stories: