9ம் வகுப்பு அரையாண்டு தேர்வு வினாத்தாள் இணையதளத்தில் லீக்: கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி

கோவை: ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு நாளை துவங்கவுள்ள நிலையில், தேர்வுக்கான வினாத்தாள் இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதனால், கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு நேற்று துவங்கியது. இதைத்தொடர்ந்து நாளை முதல் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் துவங்குகிறது. இந்த தேர்வுகள் வரும் 23ம் தேதி நிறைவடைகிறது. மேலும், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாவட்ட அளவில் வினாத்தாள் தயார் செய்யப்பட்டு தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு நாளை நடக்கிறது. மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு, 2.30 மணி நேரம் தேர்வு நடக்கிறது. இதில், பகுதி ஒன்றில் ஒரு மதிப்பெண் வினாக்கள் 10 மதிப்பெண், பகுதி 2ல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் 18 மதிப்பெண், பகுதி 3ல் 8 மதிப்பெண் வினாக்கள் 16 மதிப்பெண்ணிற்கும், பகுதி 4ல் 20 மதிப்பெண்களுக்கான வினாக்கள், பகுதி 5ல் 12 மதிப்பெண், பகுதி 6ல் 24 மதிப்பெண் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் உள்ளது. ேதர்வு நாளை துவங்கவுள்ள நிலையில், இன்று காலையில் இணையதளம், வாட்ஸ் அப்களில் வினாத்தாள் வெளியாகி பரவி வருகிறது. இது எந்த மாவட்டத்தை சேர்ந்த வினாத்தாள் என சரிவர தெரியவில்லை. இருப்பினும், மாணவர்கள் பலர் வினாத்தாளை டவுன்லோடு செய்து வருகின்றனர். இந்த வினாத்தாள் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்ததாக இருக்கும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் வெளியாக வில்லை: சிஇஓ தகவல்

இது குறித்து கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறுகையில், “கோவை மாவட்டத்தில் தேர்வு நடைபெறும் நாளில் தான் வினாத்தாள் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்படும். ேதர்வுக்கான வினாத்தாள் 12 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதனால், கோவை மாவட்டத்தில் இருந்து வினாத்தாள் வெளியாக வாய்ப்பு இல்லை. இந்த வினாத்தாள் கோவையை சேர்ந்ததாக இருக்காது. இருப்பினும், ஆய்வு செய்யும் பணி நடக்கிறது “ என்றார்.

Related Stories: