பாத்திமா தற்கொலை விவகாரம்: சென்னை ஐஐடி வளாகத்தில் போராட்டம் நடத்த முயன்ற கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் கைது

சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா மரணத்திற்கு காரணமான பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை ஐஐடியில் முதுநிலை முதலாம் ஆண்டு படித்து வந்த கேரள மாணவி பாத்திமா, கடந்த நவம்பர் மாதம் 9ம் தேதி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாத்திமா உள்மதிப்பீட்டு தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்ததன் விளைவாகவும், அதன் மூலம் ஏற்பட்ட மனஅழுத்தத்தின் காரணமாகவும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பாத்திமா செல்போனை ஆய்வு செய்த போது அதில் தனது தற்கொலைக்கு காரணம் ஐஐடியில் இணை பேராசிரியர் என்றும், மேலும் இரு பேராசிரியர்கள் தன்னை மனரீதியாக துன்புறுத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். மாணவியின் குடும்பத்தினரும் கடுமையாக குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து, இந்த வழக்கின் விசாரணை மத்திய குற்றப்பிரிவின் சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றி காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் பாத்திமா தற்கொலை தொடர்பாக புதிதாக ஒரு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாத்திமா தற்கொலை தொடர்பாக இதுவரை எந்தவித கைது நடவடிக்கையும் காவல்துறை சார்பில் நடத்தப்படாததால் கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பானது ஐஐடியில் முற்றுகை போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று ஐஐடி முன்பு பல காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் பாதுகாப்பானது வலுப்படுத்தப்பட்டிருந்தது.

இதனால் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. பின்னர் அங்கு வந்த கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்கள் ஐஐடி மாணவி மரணத்திற்கு காரணமான பேராசிரியரை கைது செய்ய வலியுறுத்தினர். பின்னர் மாணவி தற்கொலை விசாரணை ஒரு மாதத்திற்கு மேலாகியும் குற்றவாளிகளை கைது செய்யாத காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களின் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். ஆகினும் போராட்டத்தை கைவிட மறுத்ததால் அவர்கள் அனைவரையும் போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

Related Stories: