தேனி தொகுதி தேர்தலை எதிர்த்து வழக்கு பதில் மனு தாக்கல் செய்ய ஓ.பி.எஸ் மகனுக்கு உத்தரவு

சென்னை: தேனி நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத தேனி தொகுதி எம்.பி. ரவீந்திரநாத் ஜனவரி 23ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய  வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த  ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவிந்திரநாத் குமாரும்,  திமுக கூட்டணியில் காங்கிரஸ்  சார்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும்,  அமமுக கட்சி சார்பாக தங்க தமிழ்செல்வனும் போட்டியிட்டனர். இதில், அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத், 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி தேனி தொகுதியின் வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், தேனி தொகுதியில் ரவீந்திரநாத் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்துள்ளார். அதற்கான வீடியோ ஆதாரங்கள்  சமூக வலைதளங்கள் வெளியாகியுள்ளன. தேனி தொகுதியில்  அதிக அளவில் பணப்பட்டுவாடா நடப்பதாக புகார் வந்த போதும்,  தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தவில்லை. மேலும், தேனி தொகுதியில் அதிகார துஷ்பிரயோகம்  செய்தும், முறைகேடு செய்தும் அதிமுக வேட்பாளர் ரவிந்தரநாத்குமார் வெற்றி பெற்றுள்ளார். எனவே, அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், மனுவுக்கு பதிலளிக்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கும், அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் உள்ளிட்டோருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கில், ரவீந்திரநாத், இதுவரை பதில்மனு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் மிலானி தரப்பில் வக்கீல்கள் வி.அருண், ஜி.கிருஷ்ணராஜா ஆகியோர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், இந்த வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் பதில்மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, பதில்மனு தாக்கல் செய்யும் வரை, அவர் எம்.பி. பதவியை வகிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தேர்தல் வழக்கில் ஜனவரி 23ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று ரவீந்திரநாத் குமாருக்கு உத்தரவிட்டார். விசாரணை ஜனவரி 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Related Stories: