ராணி மேரி கல்லூரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ‘காவலன்’ செயலியில் 1 லட்சம் பேர் பதிவு: போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக காவல் துறை சார்பில் ‘காவலன்’ செயலி அறிமுகம் செய்யப்பட்டது. காவலன் செயலி குறித்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதற்கான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் மெரினா காமராஜர் சாலையில் உள்ள ராணி மேரி கல்லூரியில் ‘காவலன்’ எஸ் ஒ எஸ் செல்போன் செயலி அறிமுக விழா நேற்று காலை நடைபெற்றது. இதில் போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் கலந்து கொண்டு ‘காவலன்’ செயலியை தொடங்கி வைத்தார். அப்போது கல்லூரி மாணவிகளிடம் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது: ராணி மேரி கல்லூரி அருகே டிஜிபி அலுவலகம் அமைந்துள்ளது. உங்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் முதலில் அங்கு தகவல் சென்று விடும். ‘காவலன்’ செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் அந்த பட்டனை அழுத்தினால் உடனே காவல்துறை உதவும்.

நீங்கள் இருக்கும் இடம் பாதுகாப்பானது இல்லை என்ற உணர்வு ஏற்பட்டால் உடனே ‘காவலன்’ எஸ் ஒ எஸ் செயலி மூலம் தெரிவிக்கலாம். இந்தியாவிலேயே சென்னை, கோவை மாநகரங்கள் பாதுகாப்பானதாக திகழ்கின்றன. கல்லூரி அருகே பாதுகாப்புக்காக அம்மா ரோந்து வாகனம் வரும், அப்போது அவர்களிடம் உங்கள் குறைகளை சொல்லலாம். ‘காவலன்’ செயலி விழிப்புணர்வு ஏற்படுத்திய நான்கு நாட்களில் 1 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். அதேபோல், தினந்தோறும் 20 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அனைவரும் உங்கள் செல்போனில் ‘காவலன்’ செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, கிழக்கு மண்டல இணை கமிஷனர் சுதாகர், மயிலாப்பூர் துணை கமிஷனர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: