கட்சியில் உரிய முக்கியத்துவம் அளிக்காததால் காங்கிரஸ் கட்சியில் இருந்து ராயபுரம் மனோ விலக முடிவு

சென்னை: கட்சியில் உரிய முக்கியத்துவம் அளிக்காததால் அதிருப்தி அடைந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராயபுரம் மனோ காங்கிரசில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியில் கடந்த 30 ஆண்டுகளாக முக்கிய பொறுப்புகளில் இருந்து வருபவர் ராயபுரம் மனோ. ஜி.கே.மூப்பனாரின் தீவிர விசுவாசியாக இருந்தவர். ஜி.கே.வாசன் தமாகாவை மீண்டும் தொடங்கியபோது காங்கிரஸ் கட்சியிலே நீடித்து வந்தார். வடசென்னை மாவட்ட தலைவராக 13 ஆண்டுகளாக பதவி வகித்தவர். சென்னை மாநகராட்சி கவுன்சிலராகவும் பணியாற்றினார். கட்சியில் பிரபலமானவர்களில் ஒருவராக திகழ்ந்த ராயபுரம் மனோ 3 முறை சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனாலும் காங்கிரஸ் கட்சிக்காக தொடர்ந்து உழைத்து வந்தார். திருநாவுக்கரசர் தலைவராக இருந்த போது அவருக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்ற பின்பு கட்சி நிகழ்ச்சிகளில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் குமுறல்கள் இருந்து வந்தது. இந்நிலையில், ராயபுரம் மனோ காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது. இதற்கான அறிவிப்பை இன்று முறைப்படி அறிவிக்க உள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்சியில் உரிய முன்னுரிமை அளிக்காததால் தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சியில் இருந்து விலகும் அவர் வேறு கட்சியில் இணைவாரா என்பதை இன்று அவர் முறைப்படி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: