இருமாநில நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழக-கேரள அதிகாரிகள் நாளை பேச்சுவார்த்தை

சென்னை: நதிநீர் பங்கீடு குறித்து தமிழகம் மற்றும் கேரள அதிகாரிகள் நாளை சென்னையில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தமிழகம் மற்றும் கேரளா இடையே பல்வேறு நதிநீர் பிரச்னைகள் இருக்கிறது. குறிப்பாக, திருவாணி அணை, பரம்பிகுளம்-ஆழியாறு, ஆணைமலை ஆறு, புன்னம்புலா ஆகிய ஆறுகளின் நீர் பங்கீட்டில் பிரச்னை நீடித்து வருகிறது. இதுதவிர முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை அதிகரிப்பது தொடர்பாக தீர்வு எட்டியபாடில்லை. இப்பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்று இருமாநில விவசாயிகளும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து பேச முன்வர வேண்டும் என்று கேரள முதல்வர் பிரனாயி விஜயனிடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். அதன்பேரில், கடந்த செப்டம்பர் 25ம் தேதி இரு மாநில முதல்வர்கள் திருவணந்தபுரத்தில் சந்தித்து பேசினர்.

அப்போது, பி.ஏ.பி திட்டம் ஒப்பந்தம் புதுப்பிப்பு, ஆணைமலை ஆறு, நல்லாறு அணைதிட்டம் மற்றும் மனக்கடவு நீர் பங்கீடு உள்ளிட்டவைகள் குறித்தும் பாண்டியாறு, புன்னம்புலா ஆறு திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதற்காக தொடர்ந்து இரு மாநிலங்களில் இருந்தும் இரண்டு குழுக்கள் அமைத்து பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் தமிழகம் மற்றும் கேரளா சார்பில் நீர்வளத்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு நாளை(12ம் தேதி) காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறது.

Related Stories: