திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: ஏகன் அநேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில், பரணி தீபம் ஏற்றப்பட்டது

தி.மலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பரணித் தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 9 நாட்களாக வெகு விமரிசையாக நடந்து வருகிறது. 10ம் நாளான இன்று, மகாதீப பெருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. மகாதீபத்தை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டுள்ளனர். சுமார் 25 லட்சம் பக்தர்கள் இன்று மகாதீபத்தை தரிசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, அண்ணாமலையார் சன்னதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு, ‘ஏகன் அநேகன்’ எனும் தத்துவத்தை உணர்த்தும் வகையில், பரணி தீபம் ஏற்றப்பட்டது.

முக்கிய விழாவான மகாதீப பெருவிழா இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இதனையொட்டி அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் உள்ள தீபதரிசன மண்டபத்தில் மாலை 5 மணியளவில் பஞ்சமூர்த்திகள் அடுத்தடுத்து எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளனர். பின்னர், மாலை 5.55 மணிக்கு, 3ம் பிரகாரம் கோயில் தங்கக் கொடிமரம் முன்பு ஆனந்த தாண்டவத்துடன் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி காட்சியளிப்பார். அப்போது, கொடிமரம் எதிரில் அகண்டத்தில் தீபம் ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து, 2,668 அடி உயரமுள்ள மகேசன் வடிவான அண்ணாமலையின் உச்சியில் ‘மகா தீபம்’ ஏற்றப்படும். இதற்காக 3,500 கிலோ தூய நெய், ஆயிரம் மீட்டர் திரி (காட்டன் துணி), 10 கிலோ கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.

தீபம் ஏற்றுவதற்கான செம்பு உலோகத்தால் வடிவமைக்கப்பட்ட 5 அடி உயரம், 200 கிலோ எடைகொண்ட தீப கொப்பரை, மலை உச்சிக்கு நேற்று கொண்டு சேர்க்கப்பட்டு, சிறப்பு பூஜைகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மகா தீபத்தை தரிசிக்கவும், நெய் காணிக்கை செலுத்தவும் அதிகபட்சம் 2,500 பக்தர்களை மட்டும் மலைமீது அனுமதிக்க திட்டமிட்டுள்ளனர். அதற்கான அடையாள அனுமதி சீட்டு இன்று காலை 6 மணிக்கு சண்முகா அரசு பள்ளி வளாகத்தில் வழங்கப்படுகிறது. மகாதீப விழாவை தரிசிக்க, இன்று மதியம் 2 மணி முதல் மாலை 3.30 மணி வரை கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்க உள்ளனர்.

Related Stories: