இன்ஸ்பெக்டருக்கு மட்டுமே விசாரணை அதிகாரம் சிறுமிகள் வழக்குகளில் விதிமீறினால் நடவடிக்கை: போலீசாருக்கு பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு எச்சரிக்கை

வேலூர்: காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு சிஎஸ்ஆர் நகல் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்காமல் போலீசார் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகபொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.  இதேபோல், சிறுமிகள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது போன்ற வழக்குகளிலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், சிறுமிகள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் இன்ஸ்பெக்டருக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும், போலீசார் யாராவது விதிமீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து பெண் வன்கொடுமை தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது: பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது போன்ற வழக்குகளை விசாரிக்க இன்ஸ்பெக்டர் பதவிக்கு கீழ் உள்ளவர்களுக்கு அதிகாரம் கிடையாது. போலீசார் இன்ஸ்பெக்டரின் ஆலோசனையின்றி சிறுமிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க கூடாது. விதிமீறி போலீசார் யாராவது செயல்படுவது தெரியவந்தால் துறை ரீதியாக கடும் நடவடிக்ைக எடுக்க எஸ்பிக்கு பரிந்துரைக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமிகளின் விவரங்களை எக்காரணத்தை கொண்டும் வெளியிடக்கூடாது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்க வேண்டிய வழிகாட்டுதல்களை கட்டாயம் வழங்க வேண்டும்.

மைனர் பெண்கள் மாயமானால், இன்ஸ்பெக்டர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மைனர் பெண்ணை காதலித்து அழைத்து சென்றாலும், கடத்தல் வழக்காகவே பதிவு செய்ய வேண்டும். மேலும் குற்றவாளிகளை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இதில் காலம் தாழ்த்தியதாக தெரியவந்தால், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீட்கப்பட்ட மைனர் பெண்ணை அரசு காப்பகத்தில் ஒப்படைத்து தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டியது அவசியம். அதேபோல் விசாரணையின்போதே சிறுமிகள் தொடர்பான வழக்கு விவரங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு இன்ஸ்பெக்டர்கள் தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

திருமணத்துக்கு பிறகும் கைது செய்யலாம்

2018 நவம்பர் மாதம் மைனர் பெண் கடத்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘குறிப்பிட்ட வயதை அடைந்து திருமணம் செய்தாலும் மைனர் பெண் மாயமானதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தால், அவரது கணவரை கைது செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது. மேலும் ‘கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை மைனர் பெண்கள் மாயமானார்கள். இதுதொடர்பாக எத்தனை பேருக்கு தண்டனை கிடைத்தது’ என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் டிஜிபிக்கு உத்தரவிட்டது. அதன்படி வேலூர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் பெண் குழந்தை பெற்றெடுத்த மைனர் பெண்ணின் கணவரை வேலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: