திங்கள்நகரில் வணிக வளாகமாக கட்டப்படும் புதிய பேருந்து நிலையம்...பொதுமக்கள் கடும் கண்டனம்

திங்கள்நகர்: திங்கள்நகர் தேர்வுநிலை பேரூராட்சி உள்பட்ட பேருந்து நிலையம், 3 பிரிவுகளாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்தது. அரசு பஸ்கள், மினி பஸ்களின் ஆக்கிரமிப்பால் பேருந்து நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது. ஆகவே நவீன வசதிகளுடன் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த பொது மக்கள், பிரின்ஸ் எம்எல்ஏ ஆகியோர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் எதிரொலியாக அதே பகுதியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் அமைக்க தமிழக அரசு ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கியது. தொடர்ந்து பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த 8 மாதமாக மும்முரமாக நடந்து வருகிறது.

 ஆனால்  எந்த காரணத்திற்காக புதிய பேருந்து நிலையம் அமைக்க மக்கள் கோரிக்கை வைத்தனரோ, அதற்கு எதிர்மாறாக பேருந்து நிலையத்தில் கட்டிட பணிகள் நடந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள எந்த பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தினை எடுத்து கொண்டாலும், பேருந்துகள் பேருந்து நிலையத்தினுள் வந்து செல்வதற்கு வசதியாகவும், அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வசதியாகத்தான் பேருந்து நிலையம்  கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக பேருந்து நிலையத்தினுள் பேருந்துகளின் எண்ணிக்கையை விட, கடைகளின் எண்ணிக்கை மிக குறைவாகத்தான் இருக்கும்.  

இதன் வாயிலாக பயணிகளுக்கு போதிய இடவசதி பேருந்துநிலையத்தினுள் செய்து  கொடுக்கப்படும். ஆனால் தற்போது திங்கள்சந்தை பேருந்து நிலையத்தில் வரும் பேருந்துகளின் எண்ணிக்கையை விட இருமடங்குக்கு மேல் கடைகள் கட்டப்பட்டுள்ளது. அதோடு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் நிறுத்துமிடம்  கட்டப்படவில்லை. சுமார் 50 பேருந்துகள் பேருந்து நிலையத்தில் வருகிறது என்றால், தற்போது சுமார் 90 கடைகளுக்கும் மேல் கட்டப்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலைய பரப்பளவு கடைகளின் ஆக்ரமிப்பாக உள்ளது.

இதனால் இப்புதிய பேருந்து நிலையத்தில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். எந்த காரணத்திற்காக புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறோ அதற்கு மாறாக  அமைக்கப்பட்டு வருகிறது. இதை பார்க்கையில் பேரூராட்சி நிர்வாகம் மக்கள் நலனில் அக்கரை கொள்ளாமல், தங்கள் வருமான போக்கில் திட்டமிட்டு வரைபடம் தயாரித்து புதிய பேருந்து நிலையம் என்ற பெயரில் வணிக வளாகம் அமைக்கும்  செயலாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு மாநில காங்கிரஸ் ஓபிசி பொதுச்செயலாளர் ஆன்றோ அலெக்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories: