கல்லிடைக்குறிச்சி அருகே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் மக்கள் பாதிப்பு

அம்பை: கல்லிடைக்குறிச்சி அருகே கிடப்பில் போடப்பட்ட சாலை பணியால் பெரியார் சமத்துவபுரம் கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேரன்மகாதேவி ஊராட்சி ஒன்றியம் கல்லிடைக்குறிச்சி அருகே அயன்சிங்கமபட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட பெரியார் சமத்துவபுரத்தில் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். அங்குள்ள தெருக்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக உருக்குலைந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் புகாரையடுத்து கடந்த 6 மாதத்திற்கு முன் அங்குள்ள கல்லிடைக்குறிச்சி - மணிமுத்தாறு சாலையை இணைக்கும் 8 தெருக்களின் சாலைகளை பெயர்த்து சின்ன பின்னமாக்கி எந்த பணியும் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் வீட்டிலிருந்து நடந்து மெயின் ரோடு வந்து பஸ் ஏறி வெளியூர் செல்ல வரமுடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதியில் வசித்து வரும் முதியவர் கோபாலகிருஷ்ணன் கூறுகையில், இங்கு என்னைப்போன்ற முதியோர்கள் அதிகமாக வசித்து வருகிறோம்.

எங்கள் பகுதியிலுள்ள குழந்தைகள் உள்ளிட்டவர்கள் அவசர மருத்துவ உதவிக்கு ஆட்டோக்கள் கூட வருவதில்லை. சாலைகளை பெயர்த்து போடப்பட்ட ஜல்லி கற்கள் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களை பதம் பார்த்து விடுவதால் வாகனங்கள் பழுதடைந்து விடுவதால் மாணவர்கள் பள்ளி கல்லூரி செல்ல முடியாது விபத்திற்குள்ளாகும் நிலையில் இருந்தது. இதுகுறித்த செய்தி கடந்த ஜூன் மாதம் தினகரன் நாளிதழில் படத்துடன் வெளி வந்தது. அதன்பின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்த்தனர். அவர்களிடம் எங்கள் நிலைமையை எடுத்து கூறினோம். அதன்பின் கடந்த ஒரு வாரத்திற்கு முன் சாலைகளின் குறுக்கே ஆங்காங்கே ஜல்லியை கற்களை போட்டு விட்டு சென்று விட்டனர். இதனால் சாலையில் நடந்து கூட செல்ல முடியாது சிரமப்பட்டு வருகிறோம் என்றார். மாதக்கணக்கில் கிடப்பில் போடப்பட்ட பெரியார் சமத்துவபுரம் கிராம தெரு சாலைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: