கொடைக்கானலில் சீசனுக்கு தயாராகும் செட்டியார் பூங்கா

கொடைக்கானல்: கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகே உள்ளது செட்டியார் பூங்கா. சுமார் 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா, பிரையன்ட் பூங்கா கட்டுப்பாட்டில் உள்ளது. கொடைக்கானலில் வரும் ஏப்ரல், மே மாதங்கள் குளுகுளு சீசன் காலமாகும். இந்த காலங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் கொடைக்கானல் வந்து செல்வர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க கொடைக்கானல் செட்டியார் பூங்கா நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ஏப்ரல், மே மாதங்களில் பூக்கும் வகையில் பூக்களின் நாற்றுக்கள் நடும் பணி தற்போது துவங்கியுள்ளது. இதற்கான மலர் படுகைகள் தயாரிக்கப்பட்டு, நாற்று நடும் பணியை பூங்கா ஊழியர்கள் செய்து வருகின்றனர். ஏப்ரல், மே மாதங்களில் பூக்கும் வகையில் அஷ்டமேரியா, சால்வியா, டெல்பீனியம், பேரிஸ்டைசி, லுபின், உயர் ரக டேலியா உள்ளிட்டவைகளை நடும் பணி நடைபெற்று வருகிறது. புதிய மலர் பாத்திகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

கொடைக்கானல் செட்டியார் பூங்கா மேற்பார்வையாளர் கோபு கூறியதாவது:

தற்போது சால்வியா, அஷ்டமேரியா, பாரிஸ் டைசி, லூப்பின் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் அதிகமான மலர் நாற்று நடும் பணி தொடங்கியுள்ளது. இந்த மலர்கள் ஆண்டுதோறும் பூக்கக்கூடிய ரக மலர்களாகும். இதனால் முதற்கட்டமாக இந்த வகை மலர்களை நடும் பணியை தொடங்கியுள்ளோம். மேலும் பல்வேறு உயர் ரக மலர்கள் நாற்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர், உயர் அலுவலர்கள் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு கூறினார்.

Related Stories: