தீபத்திருவிழா பணிகளில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பரிதவிப்பு

திருவண்ணாமலை :  திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு, அதிகாரிகள் அடிப்படை வசதிகள் கூட செய்து தராததால் பரிதவித்து வருகின்றனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவிழா நடைபெறும் 10 நாட்களும் காலை மற்றும் இரவு நடைபெறும் சுவாமி வீதிஉலாவை காண திரளான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருவிழா என்றாலே பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதி, அடிப்படை வசதி மட்டுமின்றி மிகவும் முக்கியமானது நகர் பகுதியை தூய்மையாக வைத்துக்கொள்வதும் தான்.

இந்நிலையில், சுமார் 200 துப்புரவு பணியாளர்கள் திருவிழா தொடங்கிய நாள் முதல் மழை மற்றும் குளிரையும் பொருட்படுத்தாமல் சுழற்சி முறையில் ஈடுபட்டு நகர் பகுதியை தூய்மையாக பராமரித்து வருகின்றனர். ஆனால், இவர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய அடிப்படை வசதிகள், பாதுகாப்பு உபகரணங்கள் கூட வழங்காததுதான் வேதனைக்குரியதாக உள்ளது என்கின்றனர் பொதுமக்கள். அண்ணாமலையார் கோயில் எதிரே நேற்று காலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண் துப்புரவு பணியாளர்கள், மாஸ்க் (முகமூடி), கையுறை உள்ளிட்ட எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அங்கு ஏற்கனவே தூவப்பட்டிருந்த பிளிச்சிங் பவுடர், புகை மூட்டம்போல் காற்றில் பரவி மூச்சுத்திணறல் ஏற்பட்டு கடும் சிரமத்திற்குள்ளாகினர். இதனால் தங்களது சேலை முந்தானையால் முகத்தை மூடிக்கொண்டு துப்புரவு பணியில் ஈடுபட்டனர். இதில் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள சிலருக்கு மட்டுமே முகமூடி, கையுறை வழங்கினார்கள். பலருக்கு வழங்கவில்லை. மழை நேரத்தில் கையுறை இல்லாமல் குப்பை கழிவுகள் அகற்ற சிரமமாக உள்ளது என வேதனையோடு தெரிவித்தனர் துப்புரவு பணியாளர்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துப்புரவு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

Related Stories: