உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்கு வயது வரம்பு அதிரடியாக உயர்வு: கல்வித் தகுதியும் நீக்கம்

சிறப்பு செய்தி

தமிழகம் முழுவதும் நகர்ப்புற  உள்ளாட்சிகளில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், ஊரக  உள்ளாட்சிகளில் 31  மாவட்ட பஞ்சாயத்துகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 12  ஆயிரத்து 524 கிராம  பஞ்சாயத்துகள் உள்ளன.
Advertising
Advertising

இதில் ஊரக உள்ளாட்சிகளில்  31 மாவட்ட பஞ்சாயத்துகளில் 655 வார்டு உறுப்பினர்கள், 31 மாவட்ட  பஞ்சாயத்து தலைவர்கள், 388 ஊராட்சி ஒன்றியங்களில் 6 ஆயிரத்து 471 வார்டு  உறுப்பினர்கள், 388 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், 12 ஆயிரத்து 524 கிராம  பஞ்சாயத்துகளில் 99 ஆயிரத்து 324 வார்டு உறுப்பினர்கள், 12 ஆயிரத்து 524  கிராம பஞ்சாயத்து தலைவர்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 450  உறுப்பினர்கள், 12 ஆயிரத்து 943 தலைவர்கள் பதவிக்கு உள்ளாட்சி தேர்தல் டிச.27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 6ம் தேதி துவங்குகிறது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை மனதில் கொண்டு பெண்களை கவரும் வகையில் அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்கான தகுதியை மாற்றி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி இதற்கு முன்பு அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்கு 18 முதல் 40 வயது வரை தமிழகத்தை பூர்வீகமாக கொண்டு வசிக்கும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் விண்ணப்பதாரர் 8ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும். தேர்ச்சி பெற்றிருந்தாலும், பெறாவிட்டாலும் விண்ணப்பிக்கலாம் என தகுதிகள் இருந்தது.

இந்நிலையில் இந்த தகுதியை திருத்தம் செய்து ஊரக வளர்ச்சி மற்றம் பஞ்சாயத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா பிறப்பித்துள்ள (அரசு ஆணை எண்.179) உத்தரவு: அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் பயன்பெறுபவர்கள் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்டு வசிப்பவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45 வயது வரை இருக்கலாம். மேலும் 8ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்க வேண்டும் என்ற விதி நீக்கப்படுகிறது.

அதற்கு பதிலாக சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், கால முறை ஊதியத்தில் கூட்டுறவு சங்கம், கூட்டுறவு கடைகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பிற அரசுத் துறை ஊழியர்கள், அரசு நிறுவன ஊழியர்கள், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சிகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோரது ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால் அம்மா இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. டிச. 2ம் தேதி உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் நவ.29ம் தேதி என முன்தேதியிட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து சலுகைகள்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு உள்ளாட்சிகளில் 1.4.2018 முதல்  உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது செலுத்தப்பட்ட சொத்துவரி அடுத்தடுத்த அரையாண்டுகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.1000 வழங்கும் திட்டம் பொங்கலுக்கு 45 நாட்களுக்கு முன்பே உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அம்மா இரு சக்கர வாகன திட்டத்திற்கும் கல்வித் தகுதி தேவையில்லை, வயது வரம்பு உயர்வு, சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம் என பெண்களை கவர்வதற்காக அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: