ஹெட்போனுக்கு அதிக விலை கூறியதால் கடை ஊழியரை தாக்கிய எஸ்ஐ காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் : இணை கமிஷனர் சுதாகர் உத்தரவு

சென்னை: ஆன்லைன் விலையை காட்டிலும் ஹெட்போனுக்கு கூடுதல் விலை கூறியதால் ஏற்பட்ட தகராறில், சீருடையில் கடை ஊழியரை தாக்கிய உதவி ஆய்வாளரை இணை கமிஷனர் சுதாகர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராக ராஜபாண்டி பணியாற்றி வருகிறார். இளம் உதவி ஆய்வாளர் என்பதால் பல வழக்குகளை துடிப்புடன் கையாண்டு வந்தார். இந்நிலையில் தனது செல்போனுக்கு ஹெட்போன் வாங்க அண்ணா சாலையில் உள்ள வணிக வளாகத்திற்கு நேற்று முன்தினம் ராஜபாண்டி சென்றுள்ளார். அப்போது, கடை ஊழியரிடம் தனது செல்போனை காட்டி, ஹெட்போன் கேட்டுள்ளார். அதற்கு ஊழியர் ஒரு விலை கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த ராஜபாண்டி, ஆன்லைனில் குறைந்த விலை போட்டுள்ளது. நீங்கள் ஏன் இவ்வளவு விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

உடனே, கடை ஊழியரும் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ராஜபாண்டி சீருடையில் கடை ஊழியரை கன்னத்தில் அறைந்தார். உதவி ஆய்வாளர் ராஜபாண்டி கடை ஊழியரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தகவல் அறிந்த இணை கமிஷனர் சுதாகர் கடை ஊழியரை தாக்கிய உதவி ஆய்வாளரை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் சட்டத்தை மீறி சீருடையில் கடை ஊழியரை தாக்கியதாக ஒப்புக்கொண்டார். அதை தொடர்ந்து உதவி ஆய்வாளர் ராஜபாண்டி காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றப்பட்டார். மேலும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: