10 ஆண்டுகளில் அதிகபட்சமாக 2019ல் 43 விதிமீறல் கட்டிடங்களுக்கு சீல் : சிஎம்டிஏ நடவடிக்கை

சென்னை :  சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் விதிமீறல் கட்டிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த விதிமீறல் கட்டிடங்களால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. விபத்தில் உயிர் பலி கூட  ஏற்படுகிறது. இந்த விதிமீறல் கட்டிடங்கள் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்படுகிறது. இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில்  கடற்கரையை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை  எடுக்காத சிஎம்டிஏ மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம்  25 ஆயிரம் அபராதம் விதித்தது. மேலும் விதிமீறல் கட்டிடங்கள் மீது  நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ெதாடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அடுத்த கட்ட விசாரணையின்போது  ேநரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இவ்வாறு சென்னை பெருநகர் பகுதியில் விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுப்பது, பணி நிறைவு சான்றுக்காக விண்ணப்பித்த கட்டிடங்களை ஆய்வு செய்வதற்காக, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் அமலாக்கப் பிரிவு செயல்பட்டுவருகிறது.

நகரமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அடிப்படையில், இப்பிரிவு வீதிமீறல் கட்டிடங்களுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 2007 ஜூலைக்கு முன் கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடங்களை மட்டுமே வரன்முறை செய்ய, சிறப்பு திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளதால் அதற்கு பின்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது சிஎம்டிஏ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம். இதன்படி சிஎம்டிஏ அதிகாரிகள் விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நடவடிக்கையில் இந்தாண்டில் இதுவரை 43 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாக இந்தாண்டு தான் 43 கட்டிடங்களுக்கு சிஎம்டிஏ அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

அதன்படி, 2009ம் ஆண்டு 8  கட்டிடங்களுக்கும், 2010ம் ஆண்டு 19 கட்டிடங்களுக்கும், 2011ம் ஆண்டு 24 கட்டிடங்களுக்கும், 2012ம் ஆண்டு 9 கட்டிடங்களுக்கும், 2013ம் ஆண்டு 27 கட்டிடங்களுக்கும், 2014ம் ஆண்டு 17 கட்டிடங்களுக்கும், 2015ம் ஆண்டு 19 கட்டிடங்களுக்கும், 2016ம் ஆண்டு 17 கட்டிடங்களுக்கும், 2017ம் ஆண்டு 18 கட்டிடங்களுக்கும், 2018ம் ஆண்டு 7 கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை 208 கட்டிடங்களுக்கு மட்டுமே சீல் ைவக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர் வளர்ச்சி குழு உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, “விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு முதலில் நோட்டீஸ் வழங்கப்படுகிறது. அவர்கள் அந்த விதிமீறலை சரி செய்யாவிடில் அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்கப்படுகிறது. அவர்கள் சரி செய்துவிட்டால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது” என்றார்.

Related Stories: