பருவநிலை மாற்றத்தால் கொசுக்கள் படையெடுப்பு டெங்கு காய்ச்சல் பீதியில் பொதுமக்கள்: மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்

சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் பனி, வெயில் என பருவநிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் தற்போது வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. எனவே, பொதுமக்கள் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுக்க அரசு மருத்துவமனைகளுக்கு  படையெடுத்து வருகின்றனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் திறந்த வெளி இடங்கள் மற்றும் ரயில்வே இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் அந்த நீரில் கொசுக்கள் வேகமாக உற்பத்தியாகி வருகின்றன. உள்ளாட்சிகளில் பொதுசுகாதாரம் பாதுகாக்கப்படுவது நாளுக்கு நாள் சவாலாக மாறி வருகிறது. பொதுசுகாதார பணிகளை மேற்கொள்ள போதுமான அளவில் பணியாளர்கள் இல்லை என்பது ஒருபுறம், மறுபுறம் பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்மையால் வீட்டில் சேரும் குப்பை தெரு, வாய்க்கால்களில் வீசி எறிய சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற செயல்களால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் நோய் பரப்பும் காரணிகளான ஈ, கொசு போன்றவை எந்நேரமும் தொல்லைகளாக உருவாகி உள்ளன.பகல் முழுவதும் ஈ தொல்லையால் அவதிப்படும் பொதுமக்கள், சூரியன் மறைந்தால் கொசு தொல்லைக்கு ஆட்பட நேரிடுகிறது. இரவில் கொசு விரட்டுவதற்கென மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் மீறி கொசுக்கடியால் டெங்கு, சிக்குன்-குனியா, வைரஸ் என பலவித காய்ச்சலில் பாதிக்கப்பட்டு பரிதவிக்கின்றனர். தற்போது தட்ப வெட்ப சூழ்நிலை மாறி வருகிறது. காலையில் கடுங்குளிருடன் பனி பொழிவு உள்ளது. மதிய நேரங்களில் வெயில் உணரப்படுகிறது.  இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘பனி, வெயில் இரண்டும் சேர்ந்து கொசு வளர்ச்சிக்கு ஊக்குவிக்கிறது. துப்புரவு பணிகளும் மோசமாக இருப்பதால் கொசு தொல்லை பெரும் தொந்தரவாக உள்ளது. மாலை 6 மணிக்கு மேல் வெளியில் நடமாடவில்லை. ஜன்னல் கதவுகளை திறந்து வைக்கவும் முடியவில்லை. அந்தளவு கொசு படைகள் அட்டூழியம் செய்கிறது. இதனால் டெங்கு காய்ச்சல் வருமா என்ற அச்சத்திலேயே இருக்க வேண்டி உள்ளது. நிம்மதியாக தூங்கவும் விடுவதில்லை. டெங்கு, வைரஸ் காய்ச்சல் பரப்பும் கொசுவை தடுக்க சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து தடுப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதன் காரணமாக பொதுமக்கள் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தங்களுக்கு வந்த காய்ச்சல் டெங்கு காய்ச்சலாக இருக்குமோ என்ற பயத்தில் சென்னை, திருவள்ளூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு படையெடுக்கின்றனர்.மேலும் குழந்தைகளும் அதிகளவில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பிற்கு ஆளாகி மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். இவ்வாறு அரசு மருத்துவமனையில் மட்டும் தினமும் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

Related Stories: