மழைநீர் சூழ்ந்துள்ளதால் தீவானது கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு; வீட்டில் முடங்கினர் மக்கள்

ஆவடி: கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பை மழைநீர் சூழ்ந்துள்ளதால் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவிக்கின்றனர். அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட கொரட்டூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள  சென்ட்ரல் அவென்யூ, வடக்கு அவென்யூ மற்றும் 27 முதல் 29 வரை தெருக்கள், கண்ணகி தெரு, தெற்கு ரயில்வே ஸ்டேசன் சாலை, சீனிவாசன் நகர் மற்றும் சிவலிங்கபுரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன.  இந்த பகுதிகளில் கடந்த  3 தினங்களாக கொட்டிய மழையால் தண்ணீர் செல்வதற்கு வழியில்லாமல் சாலைகளில் தேங்கி நிற்கிறது. அத்துடன் மழை நீருடன் கழிவு நீரும் கலந்துவிட்டது. இதன் காரணமாக குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு  வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர்.

இதுகுறித்து குடியிருப்போர் கூறியதாவது; கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் ரூ.16 கோடியில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாய், தொடக்கத்தில் 30 அடியாகவும் முடிவில் 10 அடி அகலமாக  உள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் கால்வாயில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு, மழைநீர் தெருக்கள், குடியிருப்பில் புகுந்துவிட்டது. தண்ணீரில் துர்நாற்றம் ஏற்படுவதால் நோய்கள் பரவும் ஆபத்துள்ளது. இதுகுறித்து அம்பத்தூர் மண்டல  அதிகாரிகளுக்கு நேரில் சென்று புகார் தெரிவித்தும் அதிகாரிகள் தண்ணீரை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.கொரட்டூர் வீட்டு வசதி வாரியம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் தேங்கியுள்ள மழை நீரை மாநகராட்சி அதிகாரிகள்  போர்க்கால அடிப்படையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லாவிட்டால் மண்டல அலுவலத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். இவ்வாறு தெரிவித்தனர்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘8கொரட்டூர் வடக்கு அவென்யூ பகுதியில் 1.9 கி.மீட்டருக்கு  கால்வாய் முறையாக கட்டப்படவில்லை. இதனால் மழைநீர் செல்ல முடியாமல் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. சென்ட்ரல் அவென்யூ  பகுதியில் கால்வாய் பணி முழுமை  அடையாததால் தண்ணீர் குடியிருப்புக்குள் தேங்கி நிற்கிறது. சிவலிங்கபுரத்தில் கால்வாய்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதால் அங்கேயும் செல்ல வழியில்லை. சீனிவாசபுரத்தில் ரயில்வே  சுரங்கப்பாதை கட்டப்படுவதால், மழைநீர் செல்ல வழியில்லாமல் வீடுகளை சூழ்ந்து உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில், மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: