தரைப்பால நீரில் மூழ்கி தொழிலாளி பலி நெடுஞ்சாலைத்துறை 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: அம்பத்தூர் அருகே மண்ணூர்பேட்டை, நேரு நகர் மெயின் ரோட்டை சேர்ந்த கூலி தொழிலாளி ஷேக் அலி (49), கடந்த 30ம் தேதி மாலை, வேலை முடிந்து, மண்ணூர்பேட்டை சி.டி.எச். சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, தொடர்மழை காரணமாக அங்கிருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கி இருந்தது.  இதனை கவனிக்காத ஷேக் அலி தரைப்பால பள்ளத்தில் தவறி விழுந்தார். அவரை பாதசாரிகள் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் அவர் நீரில் மூழ்கினார். இதனையடுத்து தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், நீண்ட நேரம் போராடி உயிரிழந்த நிலையில் ஷேக் அலி உடலை மீட்டனர்.

அப்போது, மழைநீர் கால்வாய் அமைக்காத நெடுஞ்சாலை துறையே இந்த இறப்புக்கு காரணம் என்று கூறி, பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த செய்தி ‘தினகரன்’ நாளிதழில் படத்துடன் வெளியானது. இதனை பார்த்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி நிரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்காக எடுத்து விசாரித்தார். அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் 3 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Related Stories: