வரும் 27, 30 தேதிகளில் இரண்டு கட்டமாக ஊராட்சிகளுக்கு மட்டுமே தேர்தல்

* மாநகராட்சி, நகராட்சிகளுக்கு இல்லை

* மாநில தேர்தல் ஆணையம் கைவிரிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளான ஊராட்சிகளுக்கு மட்டும் வருகிற 27ம் தேதி மற்றும் 30ம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தாமல் ஊரக அமைப்புகளுக்கு மட்டும் அறிவித்திருப்பது தமிழகத்தில் இதுவரை இல்லாத நடைமுறையாக உள்ளதாகவும், இதனால் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. உச்ச நீதிமன்றம், சட்டரீதியிலான அனைத்து நடைமுறைகளையும் முறையாக முடித்து டிசம்பர் 13ம் தேதிக்குள் அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்று கெடு விதித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி நேற்று காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த அறிவிப்பில்,  ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வருகிற 27 மற்றும் 30 தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.

இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி கூறியதாவது: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் இம்மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும். அதன்படி, வேட்புமனு தாக்கல் வருகிற 6ம் தேதி தொடங்கும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதிநாள் வருகிற 13ம் தேதி ஆகும். 16ம் தேதி வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். 18ம் தேதி வரை வேட்புமனுக்களை திருப்ப பெறலாம். வாக்குப்பதிவு 27 மற்றும் 30ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ம் தேதி நடைபெறும். அதன்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள 1,18,974 ஊரக ஊராட்சிகளுக்கான பதவியிடங்களை நிரப்ப நேரடி தேர்தல் நடக்கிறது. இதில், 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 6,471 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 12,524 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களும் மற்றும் 99,324 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறும்.

கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையில் இல்லாமலும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் கட்சி அடிப்படையிலும் நடைபெறும்.

முதல்கட்டத்தில் 194 ஊராட்சி உள்பட 3,232 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6,251 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49,638 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் 27ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். 2ம் கட்டத்தில் 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 3,239 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 6,273 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 49,686 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் வருகிற 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். முதல்கட்ட வாக்குப்பதிவில் 31,698 வாக்குச்சாவடிகளிலும், 2ம் கட்ட வாக்குப்பதிவில் 32,092 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நடைபெறும்.

சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள அடிப்படை விவரங்களை கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஊரக பகுதிகளில் 1 கோடியே 64 லட்சத்து 28 ஆயிரத்து 941 ஆண் வாக்காளர்களும், 1 கோடியே 67 லட்சத்து 4 ஆயிரத்து 868 பெண் வாக்காளர்களும், 2,277 மூன்றாம் பாலிய வாக்காளர்களும் ஆக மொத்தம் 3 கோடியே 31 லட்சத்து 36 ஆயிரத்து 86 வாக்காளர்கள் உள்ளனர். ஊராட்சி தேர்தலுக்கான 870 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 16,840 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள். ஒரு வாக்குச்சாவடிக்கு 7 அல்லது 8 அலுவலர் என மொத்தம் 5,18,000 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பதவியிடங்களை தவிர்த்து மற்ற பதவியிடங்களுக்கு சுமார் 2,33,000 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து ஊரக ஊராட்சி அமைப்புகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் நான்கு பதவியிடங்களுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி வீதம் தேர்தல் பணி பார்வையாளர்களாக நியமிக்கப்படுவார்கள்.

மக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றியும் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் கண்டறிப்பட்டு வாக்குப்பதிவு நடவடிக்கை வீடியோ கிராபி, நுண் தேர்தல் மேற்பார்வையாளர்கள், இணையதள கண்காணிப்பு மூலம் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நேரடி தேர்தல் முடிந்த பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை கொண்டு 13,362 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும். தேர்தல்  நடத்தை விதிகள் மாநிலம் முழுவதும் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்களுக்கு  உட்பட்ட அனைத்து ஊரக உள்ளாட்சி பகுதிகளிலும் உடனடியாக அமலுக்கு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார். தமிழக உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத நடைமுறையாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியிடம் கேட்டபோது, “நிர்வாக காரணங்களுக்காக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இப்போது அறிவிக்கப்படவில்லை. நகர்ப்புறங்களுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்றார். இந்நிலையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்காததற்கு தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் இல்லாத அறிவிப்பாக உள்ளதாகவும், மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியின் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேதி அறிவிப்பில் ரகசியம் ஏன்?

உச்ச  நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தின்படி உள்ளாட்சி தேர்தல் தேதி நேற்று  அறிவிக்கப்படும் என்று தகவல் பரவியது. இதுதொடர்பாக தேர்தல் ஆணைய  அதிகாரிகளிடம் கேட்டபோது, 7ம் தேதிக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று  தெரிவித்தனர். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு தொடர்பான  செய்தியாளர் சந்திப்பு நேற்று காலை 10 மணிக்கு கோயம்பேட்டில் உள்ள ஆணையர்  அலுவலகத்தில் நடைபெறும் என்று காலை 9.15 மணிக்கு அறிவித்தனர். இதற்கு  அதிருப்தி தெரிவித்த செய்தியாளர்கள், தேதி அறிவிப்பில் இவ்வளவு ரகசியமாக  செயல்பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினர்.

பொங்கல் பரிசு வழங்கப்படுமா?

பொங்கல்  பரிசு தொகுப்பு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.  தற்போது உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நடத்தை  விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. எனவே, பொங்கல் பரிசு தொடர்ந்து  வழங்கப்படுமா என்று தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கேட்டபோது, நடத்தை விதிகள்  அமலுக்கு வருவதற்கு முன்பு பெயர்களுடன் பயனாளிகள் கண்டறியப்பட்ட திட்டங்களை  தொடரலாம் என்று தெரிவித்தனர்.

நகர் புறங்களுக்கு எப்போது தேர்தல்?

தமிழகத்தில்  நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் பதவிக்கான இடஒதுக்கீட்டை தமிழக  அரசு இன்னும் இறுதி செய்யாத காரணத்தால்தான் நகர்ப்புறங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமியிடன் கேட்டபோது, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு  முன்பாக இடஒதுக்கீடு வெளியிடப்படும் என்றார்.

Related Stories: